பக்கம் எண் :

300தொல்காப்பியம்-உரைவளம்

(உ-ம்).

“...........................................................................
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவுவில் மேலசைத்த கையை ஓராங்கு
நிரைவளை முன்கையென் தோழியை நோக்கிப்
படுகிளி பாயும் பசுங்குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தா யாயின் இனிநீ
நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே
.........................................................................
கடுமா கடவுறூஉங் கோல்போல் எனைத்தும்
கொடுமையிலை யாவது அறிந்தும் அடுப்பல்
வழைவளர் சாரல் வருடை நன்மான்
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி
உழையிற் பிரியிற் பிரியும்
இழையணி அல்குல்என் தோழியது கவினே” 1      (கலித்-50)

எனவரும்.

குறைந்து அவட் படரினும் என்பது-மேல் தலைவன் புணர்ச்சியுண்மையறிந்து தாழநின்ற தோழி தானுங் குறை யுற்றுத் தலைவி மாட்டுச் செல்லுதற் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

இக்கிளவி இரந்து பின்னின்ற தலைவன் உள்ளப் புணர்ச்சியுள் வழியும் குறையுற்று மெய்யுறுபுணர்ச்சி வேண்டித் தலைவி மாட்டுச் செல்லுங் காலத்தும் ஒக்கும்.


1. கருத்து: தலைவ! வில்லில் வைத்த கையையுடையனாய் வந்து என் நோக்கி புனங் காவலைக் கைவிடுமாறு செய்து விட்டாய். இனி நீ நெடிதாக இவளை நினைத்தலைப் பாதுகாப்பாயாக........இயல்பாகவே விரையும் குதிரையைச் சாட்டை கொண்டு விரைவுபடுத்துவது போல இயல்பாகவே கொடுமை நின்கண் இல்லையாயினும் சாரலில் வருடைமான் குட்டியை வளர்ப்பவர் போல இவளைப் பாராட்டி நின்னிடம் ஓம்படையாகச் சேர்ப்பன். இவளது அழகு நீ இவளைப் பக்கத்தினின்றும் பிரியின் பிரிந்துபோம்; அறிக.