பக்கம் எண் :

களவியல் சூ. 333

தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார்1 அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர் மாட்டும் உளராவரன்றே. அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமகனும் தலைமகளுமாயினோர் மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும் அவ் இழி மரபினையே சுட்டியுணரா நிற்குமாதலான் என்றவாறு,

‘காராரப்பெய்த’ என்னும் முல்லைக் கலியுள்      (கலித்-106)

“பண்ணித் தமர் தந்தொரு புறந்தைஇய
கண்ணி எடுக்கல்லா கோடேந்தகலல்குல்
புண்ணிலார் புண்ணாக நோக்கு முழு மெய்யுங்
கண்ணளோ ஆயமகள்”2

என ஐயமின்றிச் சுட்டியுணர்ந்தவாறு காண்க. இனி உயர்புள் வழி ஐயம் நிகழுமாறு:

“உயர் மொழிக் கிளவி உறமுங் கிளவி
ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே”      (பொருளியல்-42)

என்றாராகலின், ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாதது என்னையெனின், அவள் ஐயப்படுங்கால், தெய்வமோ என்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும், அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது.


1. நம்மால் விரும்பப்பட்டார், நம்மால் கொள்ளப்பட்டார் அவர் செல்வம் முதலியவற்றால் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஆவர். அவருள்ளும் உயர்ந்தாரிடமே-உயர்ந்த தலைவன் தலைவியரிடமே ஐயம் நிகழும். தாழ்ந்தாராயின் நிகழாது.

2. பொருள்: தமரால் புனையப்பட்டு ஒருபுறமாக தடவி வரும் மாலையை நீக்காத பக்கம் உயர்ந்த அகன்ற அங்குலையுடையாள் உடம்பிற் புண் இல்லாதவரும் உடம்பு முழுதும் புண் உண்டாகும்படிப் பார்க்கும்; அதனால் முழு உடம்பும் கண்ணாகவுடையவளோ அந்த ஆயர் மகள்? இதில் ஆயமகள் என்றது சுட்டியுணர்ந்தவாறு.

தொ.-3