பக்கம் எண் :

38தொல்காப்பியம்-உரைவளம்

குறிப்பறிதல் கூறுகின்றாராகலின் அக்குறிப்பு நிகழும் வழி இவையெல்லாம் அகமாம். என்னை? இருவர் மாட்டுமொத்த நிகழ்ச்சியாதலான்1, இவை தலைமகள் மாட்டுப் புலப்பட நிகழாது2 ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழுமென்று கொள்க. அவை வருமாறு:-

“உண்டாகண் அல்லது அடுநறாக்காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று”

(குறள்-1090)

எனவரும்3. பிறவும் அன்ன.

நச்.

இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயுங் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தனவன்றி மண்ணகத்தனவாதல் நூற்கேள்வியானும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்களை உணர்ப.

(இ-ள்) : வண்டே-பயின்றதன்மேலல்லது செல்லாத தாது ஊதும் வண்டு. இழையே-ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள். வள்ளி-முலையினுந் தோளினும் எழுதுந் தொய்யிற் கொடி. பூவே-கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ. கண்ணே-வான்கண்ணல்லாத ஊன்கண். அலமரல்-கண்டறியாத வடிவு கண்ட அச்சத்தாற் பிறந்த தடுமாற்றம். இமைப்பே-அக் கண்ணின் இதழ் இமைத்தல். அச்சம்-ஆண்மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும் அச்சம். என்று அன்னவை பிறவும்-என்று


1. காட்சி ஐயம் தெளிவு என்பன தலைமகன் மாட்டு மட்டும் நிகழ்வதாகக் கொள்ளின் கைக்கிளைக் குறிப்பாம். இருவர் மாட்டும் நிகழ்வதாயின் அகத்திணையாம்.

2. தலைவன் மாட்டு வெளிப்படையாக நிகழ்வது போலத் தலைவி மாட்டு நிகழாது. சிறிதளவு குறிப்பாக நிகழும்.

3. கள் பார்த்தவர்க்கு மகிழ்ச்சியைத் தராது; தன்னை யுண்டவர்க்கே மகிழ்ச்சியைத் தரும். காமம் என்பது காமம் உடையாரைக் கண்ட பொழுது கண்டவர்க்கு மகிழ்ச்சியைத் தரும் என்பது குறளின் கருத்து. காமம் உடையாரைக் காணும் போது காமம் உடையார்க்கு மகிழ்ச்சி தரும் என்றதனால், தலைவன் தலைவியைக் காணும் போது தான் கொண்ட காமம் போல அவளும் தன்னைக் கண்டு காமம் கொண்டவளாக இருத்தலை யுணர்தலால் தலைவி மாட்டும் ஐயம் நிகழ்ந்து தெளிவு கொண்ட பின்னர்க் காமக் குறிப்பு நிகழ்வதுண்டு எனக் கொள்ளலாம். அதனால் அக்குறிப்பும் அகத்திணைப் பாற்படும்.