பக்கம் எண் :

களவியல் சூ. 439

அவ்வெண்வகைப் பொருளும் அவை போல்வன பிறவும், அவண் நிகழ நின்றவை-அவ்வெதிர்ப்பாட்டின்கண் தான் முன்பு கண்ட வரையர மகள் முதலிய பிழம்புகளாய் ஈண்டுத் தன் மனத்து நிகழநின்ற அப்பிழம்புகளை. ஆங்குக்களையும் கருவி என்ப-முந்துநூற் கண்ணே அவ்வையம் நீக்குங் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

எனவே, எனக்கும் அது கருத்தென்றார். இவையெல்லாம் மக்கட்குரியனவாய் நிகழவே தெய்வப்பகுதி மேற்சென்ற ஐயம் நீக்கித் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன் கூறிற்றே யாயிற்று. 1

இனி, ‘அன்னபிற’ ஆவன-கால் நிலந்தோய்தலும் நிழலீடும் வியர்த்தலும் முதலியன.

“திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடு
மிருநிலஞ் சேவடியுந் தோயு-மரிபரந்த
போகித ழுண்கணு மிமைக்கு
மாகு மற்றிவளகலிடத் தணங்கே” 2      (பு.வெ. கைக்-3)

இக்காட்சி முதலிய நான்கும் அகனைந்திணைக்குச் சிறப்புடைமையும் இவை கைக்கிளை யாராலும் ‘முன்னைய நான்கும், (52) என்றுழிக் கூறினாம். இங்ஙனம் ஐயந்தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க.

சிவ.

தலைவியைக் கண்ட தலைவனுக்கு அவள் மண்மகளோ தெய்வமகளோ என்றாவது, நம் நாட்டாளோ பிற நாட்டாளோ என்றாவது ஐயம் நிகழும். அவ்வையத்தை நீக்கும் கருவிகள் வண்டு முதலியன.

வண்டு:

தெய்வ மகளிர் கூந்தல்மலரில் வண்டு மொய்த்தல் இல்லை என்பது நூலால் அறிந்தது. அவள் கூந்தல்மலரில்


1. ஐயத்தைக் களைதல் கூறவே களைந்தபின் நிகழ்வது துணிவாதலின் துணிவும் உடன் கூறப்பட்டது என்றார்.

2. கருத்து “இங்கே தோன்றிய இவளது நுதல் வியர்வு அரும்பும்; பூமாலை வாடும், கால் நிலம் தோயும், கண் இமைக்கும். இவை யாவும் மண்ணுலக மங்கையின் பால் நிகழ்வன வாதலின் இவள் மண்ணுலக மகளேயாவள்,”