பக்கம் எண் :

396தொல்காப்பியம்-உரைவளம்

பெருவரை நாடன் வரையு மாயிற்
கொடுத்தனெ மாயினோ நன்றே
யின்னு மானாது நன்னுத றுயரே” 1      (ஐங்குறு-230)

எனவரும். தலைவிக்குக் கூறுவனவுங் கொள்க.

“அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்பவ ரிருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னு மாங்கண தவையே” 2      (குறுந்-146)

இது தமர் வரைவு மறுப்பரோவெனக் கவன்றாட்குத் தோழி கூறியது.

“நுண்ணேர் புருவத்த கண்ணு மாடு
மயிர்வார் முன்கை வளையுஞ் செற்றுங்
களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி
யெழுதரு மழையிற் குழுமும்
பெருங்க னாடன் வருங்கொ லன்னாய்”3      (ஐங்குறு-218)

இது தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக் கண்டு கடிதின் வரைவ ரெனக் கூறியது.


1. கருத்து: பக்கம் 327-ல் காண்க.

2. கருத்து: தோழி! நம் ஊரவையிடத்துப் பிரிந்தவரைச் சேர்த்து வைக்கும் சான்றோரும் உளர் போலும். நம் தலைவனின் தமர் நம் தந்தையர் தமையன்மார் கூறுவனவற்றை நன்று நன்று என்று கூறுதலும், நம்மவர் தலைவன் தமருடன் நும் வருகை பெரிது எனக் கூறுவது செய்தனர். அதுவே காரணம்.

3. கருத்து: அன்னாய்! என் கண் துடித்தலாலும் வளைகள் கைகளை விட்டு நெகிழாது செறிதலினாலும் பெருமலைநாடன் வருவான். ஆகலின் நீ வருந்துதல் ஒழிக.