முன்னிலை அறன் எனப்படுதல் என்றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்: அறனெனப்படுதல் இருவகைப் புரைதீர் முன்னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும்-அறனென்று சொல்லப்படுந் தன்மை இருவர் கண்ணுங் குற்றந்தீர்ந்த எதிர்ப்பாடென்று செவிலியிடத்தே கூறி அக்கிளவியை நற்றாயிடத்துஞ் செலுத்தினும். என்றது, புனறருபுணர்ச்சியும், பூத்தருபுணர்ச்சியும், களிறு தருபுணர்ச்சியும் போல்வன செவிலிக்குக் கூறி அவளை நற்றாய்க்குக் கூறுதலை நிகழ்த்துவித்தலாம். எனவே அவள் தந்தைக்குந் தன்னையர்க்கும் உணர்த்துதலும் அதனை மீண்டு வந்து தலைவிக்கு உணர்த்துதலும் பெற்றாம். அவ்வறத்தொடுநிலை எழுவகைய (207) எனப் பொருளியலுட் கூறுப. (உ-ம்) “காமர் கடும்புனல் கலந்தெம் மொடாடுவாள்” என்னுங் குறிஞ்சிக் கலி (39)யுள். “தெருமந்து சாய்த்தார் தலை” எனப் புனறரு புணர்ச்சியால் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பச் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப அவள் ஏனையோர்க்கு அறத்தொடு நின்றவாறு காண்க. “வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது-கோடா வெழிலு முலையு மிரண்டற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து”1 (திணை-நூற்-15) “சான்றோர் வருந்திய வருத்தமு நமது வான்றோய் வன்ன குடிமையு நோக்கித் திருமணி வரன்றுங் குன்றுங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கினோ நன்றே
1. கருத்து: வாடாத சான்றோர் வரவை எதிர்கொண்டவராகி மனம் கோணாமல் நீவிர் இவளை மணந்து கொடுப்பின் அல்லது இவள் அழகும் முலையுமாகிய இரண்டிற்கும் இவ்வுலகமும் விலையாகுமோ? |