வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும்-தலைவி தமர் வரைவுடன்படத் தானும் வரைவுடன்பட்ட தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி இனி நீட்டிக்கற்பாலையல்லையெனக் கடுஞ்சொற் கூறி வரைவு கடாவல் வேண்டிய இடத்தும். (உ-ம்): “மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்: ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுத லன்பெனப் படுவது தன்கிளை செறாமை யறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாமை நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்: ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத னின்றலை வருந்தியா டுயரஞ் சென்றனை களைமோ பூண்கநின் றேரே” 1 (கலி-133)
1. கருத்து: கானலிடத்து மணல் மேலே தாழம்பூப்பூத்தது போலத் தோன்றும்படியாகக் குருகுகள் தங்கும் தாழையையுடைய துறைவனே! கேட்பாயாக. இல்லறம் நடத்துதல் என்பது வறியர்க்கு ஒன்று உதவுதலாம். பாதுகாத்தல் என்பது கூடினாரைப் பிரியாமை. பண்பென்று சொல்லப்படுவது உலக நடையறிந்து நடத்தல். அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைக் கெடாமல் பார்த்தல். அறிவு எனப்படுவது அறியாமையுடையார் தன்னைக் கூறும் சொல்லைப் பொறுத்தல். உறவு |