பக்கம் எண் :

களவியல் சூ. 24405

இஃது அறத்தொடு நின்றபின் வரைவான் பிரிந்து நீட்டித்துழி ஐயுற்ற செவிலி அவன் நும்மைப் பிரிந்தான் போலும் நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது என்றாட்குத் தோழி கூறியது.

“அன்னை வாழிவேண் டன்னை கழனிய
முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தன னாயின்
எவன்கொன் மற்றவ னயந்த தோளே1      (ஐங்குறு-108)

இஃது அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை வரையுங்கொல் என்று ஐயுற்ற செவிலிக் குறிப்பறிந்த தோழி அவட்குக் கூறியது.

“அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவ
னிவட்கமைந் தனனாற் றானே
தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே” 2      (ஐங்குறு-103)

இது வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது.

“கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற்
கென்னை பொருணினைந்தா ரேந்திழாய்-பின்ன
ரமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார்
நமரேற்றுக் கொள்ளாத ஞான்று” 3

இது சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தா ரென்றது.


1. கருத்து: அன்னாய்! வாழி! இதனைக்கேள். எம் தோளைச் சேர்ப்பன் துறந்தானாயின் அவன் விரும்பிக் கூடிய எம் தோள்கள் இனி என்னாகும்?

2. கருத்து: அன்னாய்! விரும்பிக் கேள். புன்னையுடன் ஞாழல் பூக்கும் குளிர்ந்த அழகிய துறைவன் இவட்கே அமைந்தானாகலின், இவள் மாமைக்கவினும் தானே அமைவதாயிற்றுக் காண்.

3. கருத்து: மலைபோலும் தோளுடைய நம் தலைவனுக்கு மணந்து கொடுக்கும் நாளை நமர் மறுத்தார்கள்.