“மணியில் திகழிதரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு”1 (குறள்-1273) அளவு மிகத் தோன்றினும் என்பது-பெதும்பைப் பருவத்தளாகிய தலைவி புணர்ச்சியாற் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினுங் கண்டவிடத்துந் தோழியை வினாவும் என்றவாறு. “கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது”2 (குறள்-1272) தலைப்பெய்து காணினும் என்பது-தலைவனோடு தலைவியைத் தலைப்பெய்து காணினும் வினாவும் என்றவாறு. பெய்தென்பதனைப் பெயவெனத் திரிக்க. “.............................................................................. மிடையூர் பிழியக் கண்டனென்” (அகம்-158) எனவரும். கட்டினும் என்பது-கட்டு வைப்பித்தவழியும் அவர் சொற்கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு. கழங்கினும் என்பது-கழங்கு வைத்துழியும் அவர் சொற்கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு. வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் என்பது-செவிலியும் நற்றாயும் பொருந்தியபக்கத்துக் கண்டு வெறியாடுவாமென்றவழித் தலைவிசெய்திக் கண்ணுந்தோழியை வினாவும் என்றவாறு. ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் என்பது-வெறியாடிய சென்றவழி அதற்கழிவுறுவிடத்து வரினும் என்றவாறு.
1. கருத்து: மாலையில் உள்ள மணியின் உள்ளே விளங்கும் நூல்போல என் மகளின் அழகில் உள்ளே விளங்குவதான ஓர் எண்ணம் உண்டு; அஃது யாது? 2. கருத்து: கண் நிறைந்த அழகையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய பேதைக்குப் பெண்களிடத்தில் நிறைந்த மடமை அளவுக்கு மிஞ்சியுள்ளது. |