சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே”1 (குறுந்-15) பிரிவினெச்சத்து மகணெஞ்சு வலிப்பினும் என்பது-தலைவன் வரையாது பிரிந்தவழி யொழிந்த தலைமகன் அவராகுதலுமின்றி வேறுபாடுமின்றி ஒருமனைப்பட்டிருந்த வுள்ளக்கருத்தையறிந்தவழியும் என்றவாறு. வலித்தல் என்பது தெளிதல். இருபாற் குடிப்பொரு ளியல்பின்கண்ணும் என்பது-தலைவன் குடிமை தன் குடிமையோ டொக்குமென வாராய்தற் கண்ணும் என்றவாறு. குடியென்னாது பொருள் என்றதனால் பொருளாங் குணமும் ஆயப்பெறு மென்றவாறு. அன்னவை பிறவும் என்றதனான், “நாற்றம் பெற்று நிலைப்புக் காண்டல்2 உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்துயில் மறுத்தல் கோலஞ் செய்யாமை” முதலாயின கொள்க. இவையும் வினாதற்கேதுவாம். இவற்றிற் கெல்லாஞ் செய்யுள் வந்துழிக் காண்க. நச். இது செவிலி கூற்று நிகழுமாறு கூறுகின்றது. அக் கூற்றுச் செவிலிதானே கூறப்படுவனவும், தலைவியுந் தோழியுங் கொண்டு கூற்றாகக் கூறப்படுவனவுமென இருவகையவாம். இக் கூறப்பட்ட பதின்மூன்று கிளவியும் அவை போல்வன பிறவும் செவிலி
1. கருத்து: வேலுடைய விடலையொடு வளையணிந்த மடந்தைக்கு உண்டான நட்பு அவ்விடலையின் ஊரில் மணப்பறையும் சங்கும் ஆர்ப்பரிப்ப மணந்து அவன் வீட்டில் தங்கியிருக்க நேர்ந்ததால் ஆலமர நிழலில் பொது மன்றத்தில் தோன்றிக் கூறிய நாலூர்க்கோ சர்வாய்மொழி போல உண்மையாகியது. 2. நிலைப்புக் காண்டல்-ஓரிடத்திலேயே நிலைத்திருத்தலைக் கொள்ளல். தன் உடற் பொலிவை அடிக்கடிக் கண்ணாடியிற் காணல் எனினும் ஆம். |