நெடுவேட் பரவு மன்னை யன்னோ வென்னா வதுகொ றானே பொன்னென மலர்ந்த வேங்கை யலங்குசினை பொலிய மணிநிற மஞ்ஞை யகவு மணிமலை நாடனோ டமைந்த நந்தொடர்பே” (அகம்-272) இம் மணிமிடைபவளத்துத் தலைவனைச் செவிலி கண்டு முருகெனப் பராவினமை தோழி கொண்டுகூறினாள். ‘உருமுரறு கருவிய’ (158) என்னு மகப்பாட்டினுள் “மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென வலையல் வாழிவேண் டன்னை” என்றது, தலைவி புறத்துப் போகக் கண்டு செவிலி கூறியதனைத் தோழி கொண்டுகூறினாள். தானே கூறுவன வந்துழிக் காண்க. கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்-கட்டுவிச்சியும் வேலனுந் தாம் பார்த்த கட்டினானுங் கழங்கினானுந் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம்மையல் தீராதென்று கூறுதலின் அவ்விருவருந் தம்மினொத்த திறம்பற்றியதனையே செய்யுஞ் செய்தியிடத்தும். ‘திறம்’ என்றதனான் அவர் வேறு வேறாகவுங் கூறப்படும். (உ-ம்) “பொய்ம்மணன் முற்றங் கவின்பெற வியற்றி மலைவான் கோட்ட சினைஇய வேலன் கழங்கினா னறிகுவ தென்றா னன்றா லம்ம நின்றவிவ ணலனே” 1 (ஐங்குறு-248) இது வேலன் கழங்கு பார்த்தமை கூறிற்று.
1. கருத்து: மலையும் வானும் வென்று கொண்ட முருகனது வேலையுடையவன் புதுமணல் பரப்பிய முற்றத்தில் கழங்கினை அழகுபெற இயற்றி அக்கழங்கினால் அறியப்படுவது இவள் நலம் (கற்பு) என்றால் அந்நலம் மிக நன்றாகும். |