மையீ ரோதி மடவீர் நும்வாய்ப் பொய்யு முளவோ வென்றனன் பையெனப் பரிமுடுகு தவிர்ந்த தேரனெதிர் மறுத்து நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமயத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றன ளதனள வுண்டுகொன் மதிவல் லோர்க்கே” 1 (அகம்-48) இது செவிலிக் கூற்றினைத் தோழி கொண்டுகூறியது. காதல் கைமிகக் கனவின் அரற்றலும்-தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலால் துயிலா நின்றுழியும் ஒன்று கூறி அரற்றுதலும். கனவு-துயில்: துயிலிற் காண்டலைக் கனவிற் காண்டலென்ப. (உ-ம்) ‘பொழுது மெல்லின்று’ (குறுந்-161) என்பதனுட் ‘புதல்வற் புல்லி யன்னாய்’ என்று தலைவியை விளித்தது கனவின் அரற்றலாயிற்று.
1. கருத்து: அன்னையே! வாழி. யான்சொல்வதை விரும்பிக்கேட்க. நீ என்னைப்பார்த்து நின்மகள் பால் உண்ணாள்; மேனி பசந்தனள்; இதற்குக் காரணம் யாது என வினவுகின்றாய். யானும் தெளியவில்லை உணரவும் இல்லை. முன்னொரு நாளில் தோழியரோடு வேங்கை மலர் கொய்யச் சென்றபோது வேங்கை என்பதைப் புலி எனக் கொண்டு புலிபுலி என்று ஆரவாரிக்க அவ்வொலி கேட்டு ஒருவன் அங்கு வந்து நீயிர் கூறிய புலி சென்ற வழியாது என வினவினான். அவனைத் திடீரென அங்குக் கண்ட மாத்திரத்தில் யாங்கள் ஒருவர்க்குள் ஒருவராக ஒடுங்கினோம். பின்னர் அவன் மடந்தையிர் நும் வாயில் பொய்யும் வருமோ எனக் கேட்டுத் தன் தேரை மெல்ல இயக்கி நின் மகளைப் பலமுறை நோக்கெதிர் நோக்கிய நிலையில் பெயர்ந்தான். அவன் தேர் போகும் திசையையே நோக்கிய நின் மகள் தோழீ! அவன் ஆடவனே என்றாள். இது தான் நடந்தது. இது உணரவல்லோர்க்கு ஒரு கோட்பாட்டை விளக்கும். |