வழிநிலைக் காட்சியும் உள்ளப் புணர்ச்சியென்று எழில் பெறு மேனும் இணைவிழைச் சின்றால் கைக்கிளை என்பதும் கடன் எனத் தகுமே. இல்.வி. 491 நம்பி அகச் சூத்திரமே இளம். என்-எனின் மேல் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன் குறிப்பறியாது சாரலுறின் பெருந்திணைப் பாற்படுமாகலானும், இக் கந்திருவ நெறிக்கு ஒத்த உள்ளத்தாராதல் வேண்டுமாதலானும், ஆண்டு ஒருவரோடொருவர் சொல்லாடுதல் மரபன்மையானும், அவருள்ளக் கருத்தறிதல் வேண்டுதலின், அதற்குக் கருவியாய உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : நாட்டம் இரண்டும் என்பது-தலைமகன் கண்ணும் தலைமகள் கண்ணும் என்றவாறு, அடுவுடம்படுத்தற்கு என்பது-ஒருவர் வேட்கை போல இருவர்க்கும் வேட்கை உளதாகுங் கொல்லோ எனக் கவர்த்து1 நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு என்றவாறு. கூட்டியுரைக்கும் குறிப்புரையாகும் என்பது-தமது வேட்கை யொடு கூட்டி ஒருவர் ஒருவருக்கு உரைக்குங் காமக்குறிப்புரை யாம் என்றவாறு, இதன் பொழிப்பு: இருவர்க்கும் கவர்த்து நின்ற அறிவை ஒருப்படுத்தற் பொருட்டு வேட்கையொடு கூட்டிக்கூறுங் காமக் குறிப்புச் சொல் இருவரது நாட்டமாகும் என்றவாறு, ஆகும் என்பதனை நாட்டம் என்பதனொடு கூட்டியுரைக்க இதற்குச் செய்யுள். “பானலந் தண்கழிப் பாடறிந்து தன்ஐமார் நூல்நல நுண் வலையாற் கொண்டெடுத்த-கானற்
1. கவர்த்து நிற்றலாவது இருவர் அறிவும் இவர்க்கு நம்பால் வேட்கையுண்டோ இல்லையோ என இரு நிலையில் ஊசலாடி ஐயப்பட்டு நிற்றல். |