பக்கம் எண் :

கற்பியல் சூ. 543

படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு”1      (திணைமாலை நூற்-32)

கண்ணினான் அறிப என்றவாறு.

நச்.

இஃது, அங்ஙனம் மக்களுள்ளாளெனத் துணிந்து நின்ற தலைவன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக் கூடற்குக் கருதி உரை நிகழ்த்துங்காற் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்து மென்பதூஉம் அது கண்டு தலைவியும் அக் கண்ணான் தனது வேட்கை புலப்படுத்திக் கூறுமென்பதுஉங் கூறுகின்றது: எனவே இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக் காட்சி2 கூறுகின்றதாயிற்று.

(இ-ள்) : அறிவு-தலைவன் அங்ஙனம் மக்களுள்ளாளென்று அறிந்த அறிவானே, உடம்படுத்தற்கு-தலைவியைக் கூட்டத்திற்கு உடம்படுத்தற்கு, நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும்-தன்னுடைய நோக்கம் இரண்டானுங் கூட்டி வார்த்தை சொல்லும், குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும்-அவ் வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை புலப்படுத்திக் கூறுங் கூற்றுந் தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம் என்றவாறு,

‘நாட்டமிரண்டும்’ இரண்டிடத்துங் கூட்டுக3. உம்மை விரிக்க4. இங்ஙனம் இதற்குப் பொருள் கூறல், ஆசிரியர்க்குக்


1. பொருள்: நீல மலர் மிக்க கழியிடத்து மீன்கள் மிகப்படுதலை அறிந்து அண்ணன்மார்கள் வலை கொண்டு பிடித்த மீன்களைப் பறவைகள் கவராதபடிக் காப்பவளாகிய இத் தலைவியின் கண்கள் பறவைகளைக் கடியவில்லை என்னையே நோக்குகின்றன. என்னே அவளின் காக்கும் செயல்.

2. தலைவனும் தலைவியும் முதலில் எதிர்ப்படும் போது காணும் காட்சி பின்னர் நிகழும் ஐயத்துக்கு ஏதுவானது தொடர்ந்து ஐயம் நீங்கித் தத்தம் வேட்கையைப் புலப்படுத்தும் போது நிகழும் காட்சி மெய்யுறு புணர்ச்சிக்கு ஏதுவானது. அதனால் பின்னர் நிகழும் காட்சி வழி நிலைக்காட்சியாகும். வழிநிலை-தொடர் நிலை அல்லது பின்னிலை.

3. நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும், குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும் எனக் கூட்டப்பட்டது. முன்னது தலைவனுக்குரிய தொடர். பின்னது தலைவிக்குரிய தொடர்.

4. ‘குறிப்புரையும்’ என விரிக்க.