பக்கம் எண் :

44தொல்காப்பியம்-உரைவளம்

கருத்தாதல் ‘புகுமுகம் புரிதல்’ (261) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தானுணர்க.

அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானுமுணர்க. ஒன்று ஒன்றை ஊன்றி நோக்குதலின் நாட்டமென்றார். நாட்டுதலும் நாட்டமும் ஒக்கும்.1

(உ-ம்)

நோக்கினா ணோக்கெதிர் நோக்குதாக்கணங்கு
தானைக் கொண்டன்ன துடைத்து.”2      (குறள்-1082)

எனவரும்.

இது, புகுமுகம் புரிதல்3 என்னும் மெய்ப்பாடு கூறியது.      (5)

வெள்.

மேற் குறித்த அடையாளங்களைக் கொண்டு ஐயம் நீங்கித் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன் அவளது கருத்தறியாது அவளை அணுகுவனாயின் அச் செயல் பொருந்தாவொழுக்கமாகிய பெருந்திணையாய் முடியும். ஒத்த அன்பினால் நிகழ்தற்குரிய இக்களவொழுக்கத்திற்குத் தலைமகளது உள்ளக் கருத்தினைத் தலைமகன் உணர்ந்து கொள்ளுதல் முதற்கண் வேண்டப்படுதலின், தலைமகளது உள்ளக் கருத்தினைத் தலைமகன் குறிப்பால் உணர்தற்குரிய கருவி4 கூறுகின்றது.

(இ-ள்) : காதலர் இருவர் கண்களும், அவ்விருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு ஒருவர் ஒருவர்க்குத் தம் வேட்கையுடன் சேர்த்து நோக்கும் காமக் குறிப்புரையாகும், எ-று.


1. நாட்டம்-நாட்டுதல்-தொழிற்பெயர்: அம் தொழிற்பெயர் விகுதி.

2. பொருள்: என்னைப் பார்த்தவளை நான் பாக்க அவள் அதற்கு எதிராகப் பார்த்தலானது இயல்பாகவே தாக்கும் ஒரு தெய்வப் பெண் படையையும் கொண்டு தாக்குவது போலும் தன்மைத்தாம்.

3. புகுமுகம் புரிதல்: ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழி அவன் தன்னை நோக்குதற்கண் உள்ளம் விரும்பும் நிகழ்ச்சி.

4. இப்படித் தலைவனைப் பற்றிக் கூறினும் தலைமகனது உள்ளக் கருத்தினைத் தலைமகள் குறிப்பால் உணர்தற்குரிய கருவி கூறுகின்றது என்றும் கொள்க.