வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே”1 (குறுந்-84) எனவரும். இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும்-தலைவனும் தலைவியுந் தோன்றிய இருவகைக் குடியும் நிரம்பிவருதல் இயல்பாகப் பெற்ற வழியும். ‘பொருள்’ என்றார் பிறப்பு முதலிய பத்தையுங் (273) கருதி. ‘காமர் கடும்புனல்’ என்னும் (39) கலியுள் “அவனுந்தா னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன்; .................................................................. எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்”2 எனத் தோழி தான் கூறிய இருபாற் குடிப்பொருளைக் கூறிச் செவிலி அறத்தொடுநின்றாளெனக் கொண்டெடுத்து மொழிந்தவாறு காண்க. இன்னவகையிற் பதின்மூன்று கிளவியொடு அன்னவை பிறவும்-இத்தன்மைத்தாகிய கூறுபாட்டையுடைய பதின்மூன்று கிளவியோடே அவைபோல்வன பிறவாய் வருவனவும்;
1. கருத்து: யான் பாயலில் அவளை அணைத்துத் தூங்கப் புரட்டினேன். அதற்கு அவள் வியர்த்தனன் என்று ஒதுங்கினாள். அப்போது அதை உண்மையென நினைத்தேன். அவள் தலைவனுடன் போன இப்போதுதான் அவள் சொன்னது வெறுப்பினால் என்று உணர்ந்தேன். அவள் ஆம்பல் மலரினும் மிக மெல்லியள். எப்படிச் சுரவழிச் சென்றாளோ! 2. கருத்து: அவன் யாரெனின் தினைப்புனப் பரணில் மகளிர் மூட்டும் அகிலின் புகையை உண்ட வண்ணம் இயங்கும் வானின் ஊரும் திங்களைத் தேனிறால் என எண்ணி ஏணியைச் சரிசெய்து வைக்கும் கானக நாடன் மகனாவான் என்றிப்படி அறத்தொடு நின்றேனைப் பார்த்துத் தாயும் நம் ஐயன்மார்க்குச் சென்று நின் ஒழுக்கத்தை உரைத்தாள். |