பக்கம் எண் :

426தொல்காப்பியம்-உரைவளம்

இளம்.

இது நற்றாய்க்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : செவிலியுணர்வோடு உடம்பட்ட வுள்ளத்தளாயின், நற்றாய்க்கும் மேற்சொல்லப்பட்டவை யெல்லாம் வரையப்படாவென்றவாறு.

உணர்வுடம் படுதலாவது-தலைவியையுற்று நோக்கம் நிகழ்ந்த வழியின்றித் தானும் செவிலியைப்போல உற்று நோக்காளென்று கொள்க. இப்பொருள்மேற் கிளவி வருவன உளவெனுஞ் செவிலியைப் போல வொருப்பட்ட வுள்ளத்தளாயின் அவள்கண்ணும் இக்கிளவியெல்லாம் நிகழும் என்றவாறு. உடம்படாதவாறு என்னையெனின், யாரிடத்தும் மக்களை வளர்ப்பார் செவிலியராகலானும் தமக்குத் தம் இல்லற நிலைக்குக் கடவ பகுதியான அறனும் பொருளும் இன்பமும் வேண்டுதலானும் கூற்றொடு வேறுபாடு தோன்றாது.

நச்.

இது செவிலிக்கு உரியன கூறி நற்றாய்க்கு உரிய கூற்றுக் கூறுகின்றது.

(இ-ள்) : உணர்வு உடம்படின்-அங்ஙனஞ் செவிலி உணர்ந்தாங்கே நற்றாயும் மதியுடம்படில், தாய்க்கும் வரையார்-நற்றாய்க்கும் முற்கூறிய பதின்மூன்று கிளவியும் பிறவுமாகக் கொண்டு எடுத்து மொழிதல் வரையார் என்றவாறு.

‘தாய்க்கும்’ என்றார் இவட்கு அத்துணை பயின்றுவாரா என்றற்கு. அது நற்றாய் இல்லறம் நிகழ்த்துங் கருத்து வேறு உடைமையின் உற்றுநோக்காள், செவிலியே தலைவியை உற்று நோக்கி ஒழுகுவாளாதலின். இலக்கண முண்மையின் இலக்கியம் வந்துழிக் காண்க.

தாயர் தலைவி யியல்புணர்தல்

115. கிழவோன் அறியா அறிவினள் இவள்என
 மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்
ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே       (27)