பக்கம் எண் :

428தொல்காப்பியம்-உரைவளம்

என்றது, ‘மிக்கோனாயினுங் கடிவரை யின்றே’ (சூ-93) முற் கூறினமையின் தலைவன் தன் குலத்தின் உயர்ந்தமை அறிந்தவிடத்து இங்ஙனங் கூடுதல் முறையன்றென்றது ஐயுற்ற செவிலியும் நற்றாயும் உயர்ந்தோரைக் கேட்டு இதுவுங் கூடுமுறைமை யென்றுணர்வர் என்பதாம். இலக்கணமுண்மையின் இலக்கியமும் அக்காலத்து உளவென்றுணர்க.

வெள்.

இது நற்றாயும் செவிலியும் தலைமகளது ஒழுகலாற்றை ஐயுற்றுத் துணியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) : தலைமகன் அறியா அறிவினையுடையாள் இவள் என்று குற்றமறுத்த சிறப்பினையுடைய உணர்ந்தோர் பக்கத்து உளதாகிய ஐயக் கிளவியால் தலைவனொடு தலைவிக்குளதாகிய புணர்ப்பினை யறிந்துகொள்ளுதல் செவிலிக்கும் நற்றாய்க்கும் உரியது, எ-று.

தலைவியின் மெலிவினைக் கண்டு வருந்திய செவிலியும் நற் றாயும் குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோராகிய அறிவரைப் பணிந்து மகளது மெலிவு எதனாலாயிற்று என வினவி நிற்பது. அந் நிலையில் முக்கால நிகழ்ச்சிகளையும் ஒருங்குணரும் நல்லுணர்வுடைய அப் பெரியோர்கள். ‘இவள் இத் தன்மையின் ஒருவனைக் காதலிக்கின்றாள்’ எனத் தலைவியோடு தலைவனுக்குண்டாகிய தொடர்பினை வெளிப்படச் சொல்லுதல் மரபன்மையானும், நிகழ்ந்ததனை மறைத்தல் தமது வாய்மைக்கு மாறாதலானும் நும் மகள் தலைமகன் அறியா அறிவினையுடையாள் என்றாற்போன்று ஐயுறுதற்குரிய கவர்த்த பொருளுடைய தொடரால் மறுமொழி கூறுவர். ‘எதிர் காலத்தில் தன்னை மணந்து கொள்ளும் உரிமையுடைய கணவனாலும் அறியப்படாத பேரறிவினையுடையாள் நும் மகளாகிய இவள்’ என வெளிப்படையாக ஒரு பொருளும், ‘தன் காதற் கிழமை யுடையவனாக ஒழுகும் தலைமகனாலும் அறியப்படாத அறிவுரிமை பூண்டு அவன் பொருட்டு மயங்குகின்றாள் இவள்’ எனக் குறிப்பாக மற்றொரு பொருளும் தரும் நிலையில் அறிவர் கூறிய ஐயக் கிளவியை உய்த்துணர்ந்து, தலைவன் ஒருவனுடன் தலைமகளுக்குரியதாகிய தொடர்பினைச் செவிலியும் நற்றாயும் அறிந்து கொள்ளுதற்கும் உரிய என்பது இந் நூற்பாவினால் அறிவுறுத்தப்படும் நுண் பொருளாகும்.