பக்கம் எண் :

களவியல் சூ. 28 431

தலைவியது வேட்கை, புதுக்கலத்துப் பெய்த நீர் புறம் பொசிந்து காட்டுமாறு போலும் உணர்வினையுடைத் தென்று கூறுவர் புலவர்,எ-று.

பிற நீர் மாக்களின் அறியத் தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் கிழத்திக்கு இல்லையென இயையும்.

பிற நீர் மாக்கள் என்றது, ஒத்த கிழவனும் கிழத்தியுமாய் எக்காலத்தும் ஒன்றுபட்டு வாழும் அன்பின்றித் தாம் கூடியிருக்கும் காலத்தும் தம்மை வேறு வேறாகக் கருதி வேட்கை வயப்பட்டு மனம் சென்ற வழியொழுகும், தன்மையினராய மடவோரை. மாக்களின் என்புழி ‘இன்’ உவமையுருபு. அறிய-பலர்க்கும் புலனாக. ‘பெய்ந் நீர்’ என்பதற்கேற்பப் புதுவதாக நீர் பெய்தற்குரிய புதுக்கலம் என்பது வருவித்துரைக்கப்பட்டது.

சிவ.

இளம்பூரணர் உரையில் “பிறநீர் மாக்களின் அறிய” என்னும் தொடர்க்கு உரையில்லை. அதனால் வெள்ளை வாரணனார் “இளம்பூரணர் உரையின் சிதைவினைக் கூர்ந்து நோக்கின் இந்நூற்பாவின் மூன்றாமடி ‘புதுநீர் மட்கலன் அறிய ஆயிடை’ எனப் பாடம் இருந்திருக்குமோ என ஐயுற வேண்டியுளது” என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளார். அவரே நச்சினார்க்கினியர் உரையை ஏற்றவராய்ப் ‘பிற நீர் மாக்களின் அறிய’ என்பதற்கு உரையும் எழுதி அதன் விளக்கமாக,

“பிறநீர் மாக்கள் என்றது ஒத்த கிழவனும் கிழத்தியுமாய்
எக்காலத்தும் ஒன்றுபட்டு வாழும் அன்பின்றித் தாம்
கூடியிருக்கும் காலத்தும் தம்மை வேறு வேறாகக் கருதி
வேட்கை வயப்பட்டு மனம் சென்றவழி யொழுகும்
தன்மையினராய மடவோரை”

எனவும் எழுதினார், இவ்விளக்கத்தால் பிறநீர் மாக்கள் என்பார், ஒத்த அன்பின்றிக் கண்டபொழுது தோன்றிய காம வேட்கையால் கூடுபவர் என்பதும் அவரும் மனம் சென்ற வழிச் செல்பவர் என்பதும் பெறப்படும். இது பிறநீர் மாக்களுக்கு இழிவு தருவதாகும்.
முன்பின் அறியா ஒருவனும் ஒருத்தியும் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுக் காணுதல் இருவகை பிறவிதோறும் அன்புற்றுக் கணவன் மனைவியாக இணைந்து வருவோர் இப்பிறவியிலும்