பக்கம் எண் :

432தொல்காப்பியம்-உரைவளம்

அவ்வாறிணையுமாறு ஊழின் ஆணையால் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுக் காணுதல் ஒரு வகை. பிறவி தோறும் இணைந்து வராமல் அவன் வேறு ஒருத்தியுடனும் அவள் வேறு ஒருவனுடனும் ஆக இப்படி வேறுபட்டு வந்த இருவர் இப்பிறவியில் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுக் காணுதல் ஒரு வகை. இவ்விரு வகையினருள் பின்னவர் எதிர்ப்பட்டபோது ஒருவர் வேட்கையை யொருவர் கூற்று மூலம் அறிவிப்பர். முன்னவருள் கிழவன் கூற்று மூலம் அறிவிக்கக் கிழத்தி புதுமட் கலத்துப் பெய்த நீர் கலத்தின் புறம்பே கசிந்து புலப்படுதல்போலக் கிழத்தி, தன் வேட்கை குறிப்பாகக் கிழவனுக்குப் புலப்படும்படிக் காணப்படுவள். பிறநீர் மாக்கள் என்றது பிறவிதோறும் வேறு வேறு கிழவன் கிழத்தியராக மாறி மாறி வந்தார் இப்பிறவியல் எதிர்ப்பட்டவரைக் குறிக்கும் என்று கொள்ளலாம். இதனால் இவர்க்கு இழிவு தோன்றாது. ‘பிற நீர் மாக்களின்’ என்பதற்குப் பாட வேறுபாடு காணப்படாமையின் அதுவே பாடமாகக் கொள்வதில் தவறில்லை.

காமக் கூட்டத் தூது

117. காமக் கூட்டம் தனிமையிற் பொலிதலின்
 தாமே தூதுவர் ஆகலும் உரித்தே.      (29)

ஆ. மொ.

இல.

As the love-meeting needs no help from others they themselves may become their messengers.

இளம்.

என்றது, களவிற்புணர்ச்சிக் குரியதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : மேற்சொன்னவற்றால் பாங்கனுந் தோழியு நிமித்தமாகக் கூடுதலேயன்றித் தாமே தூதுவராகிய கூட்டங்கள் நிகழப் பெறும். அது சிறப்புடைத்தாதலால் என்றவாறு.

எனவே பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்பன நியமமில்லை, யார் மாட்டும் என்றவாறாம். தனிமையிற் பொலிதலின் என்றமையான் இது மிகவும் நன்று.