நச். இஃது எய்தாதது எய்துவித்தது, பாங்கனுந் தோழியும் நிமித்தமாக வன்றித் தாமே தூதாகும் இடமும் உண்டென்றலின். (இ-ள்) : காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலின்-இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடுங் கூட்டுவாரையின்றித் தனிமையாற் பொலிவு பெறுதலின், தாமே தூதுவர் ஆகலும் உரித்தே-ஒருவருக்கு ஒருவர் தூதுவராகி ஒருவர் ஒருவரைக் கூடுதலும் ஆண்டுரித்து என்றவாறு, அது மெய்ப்பாட்டினுட் ‘புகுமுகம் புரிதன்’ (261) முதலிய பன்னிரண்டானும் அறிக. இதன் பயன் இக் கூட்டத்தின் பின்னர் வரைதலும் உண்டென்பதாம். சிவ. இச் சூத்திரம் இடந்தலைப் பாட்டின் சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்) : இயற்கைப் புணர்ச்சியானது தனிமை காரணமாக அதாவது கூட்டுவிப்பாரையின்றித் தனித் தன்மையான உணர்வு காரணமாகப் பொலிவு பெறுதலினால் அடுத்த நாள் கூட்டத்துக்கும் கூட்டுவாரை நினையாமல் தலைவன் தலைவி யிருவரும் தாமே தமக்குத் தூதுவராக அமைந்து கூடுதலும் உண்டு என்றவாறு. அக்கூட்டம் இடந்தலைப் பாடாகும், இயற்கைப் புணர்ச்சியில் தம்மை இடைநின்று ஒருவர் கூட்டு விக்க வேண்டும் என்னும் எண்ணம் இருவரிடையே இன்மையான் இயற்கைப் புணர்ச்சியில் தாமே தூதுவராதல் உண்டு என்பது பொருந்தாது. ஊழ் வயத்தால் முதல் நாளிற் கூடிப் பிரிந்தோர் மீண்டும் கூட எண்ணும் போதே இடைநின்று கூட்டுவாரை வேண்டும் நிலை வரும். அங்கும் இடைநின்று கூட்டுவாரை வேண்டாது தாமே தூதுவராகிக் கூட்டுவிப்பவராக எண்ணிக் கூடுதல் உண்டு. எனவே காமக் கூட்டம் என்பது இயற்கைப் புணர்ச்சியை மட்டும் குறிக்குமேயன்றி இடந்தலைப் பாட்டையும் உடன் குறியாது. தொ-28 |