1. இளம்பூரணர், “துணையில்லாமல் களவுப் புணர்ச்சியானது மூன்று நாள் நிகழலாம். மேற்கொண்டு துணையில்லாமல் நிகழலாகாது. அம் மூன்று நாள்களுக்குள்ளும் பாங்கனை நீக்கவும் படாது. அதாவது எதிர்ப்பட்ட தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்வதன்முன் பாங்கற்கு உணர்த்தவும் பெறும் என்றவாறு” என்றார். அந்நாளகம் என்றது மூன்று நாட்களுக்கு உட்பட்ட நாட்களை. பாங்கனைத் துணையென ஆசிரியர் கூறியதாகக் கொண்டார் இளம்பூரணர். ‘துணை’ என்னும் சொல் தோழியைக் குறித்துப் பிறவிடங்களிலும் வந்துளது. பாங்கனைத் துணையென யாண்டும் ஆளக் காணவில்லை. அன்றியும் பாங்கற்கு அறிவித்துக் கூடுவதாயின் அது பாங்கற் கூட்டம் எனப்படுமேயன்றி இயற்கைப்புணர்ச்சி யெனப்படாது. எனவே இச் சூத்திரம் பாங்கனைக் குறித்தது என்பது பொருந்தாது. 2. நச்சினார்க்கினியர் ‘துணை’ என்பதற்குக் கூட்டம் எனக் கொண்டு, “பூப்பின் புறப்பாடு தொடங்கிய மூன்று நாள்களல்லது பிற நாள்கள் புணர்ச்சியின்றிக் கழிதல் இல்லை. அம்மூன்று நாள்களே புணர்ச்சியின்றிக் கழிவனவாம். ஒருகால் இக்களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாய்விடுமோ எனும் அச்சத்தால் ஒரு நாளோ இரண்டு நாளோ புணர்ச்சியின்றிக் கழியுமாயின் அதுவும் ஆம்; வழுவாகாது” என்றுரையெழுதினார். நச்சினார்க்கினியர் களவில் புணர்ச்சியின்றிக் கழிதல் இரு வகையெனக் கொண்டு, பூப்புக் காலத்தின் முதல் மூன்று நாள் என்பது ஒரு வகையாகவும், அச்சங் காரணமாகத் தலைவியால் ஒன்று அல்லது இரண்டு நாள் என்பது ஒரு வகையாகவும் கருதினார். நச்சினார்க்கினியர் உரையினால் பூப்பின் புறப்பாடு மூன்று நாள்களே புணர்ச்சியின்றிக் கழிவன; மற்றைய நாள்கள் புணர்ச்சியின்றிக் கழியா என்பது பெறப்படும். அது பொருந்தாது. புணர்ச்சியின்றிக் கழியும் நாள்கள் அல்ல குறிப்படுதல், ஒருவழித் தணத்தல், பொருள்வயிற் பிரிதல் காலங்களில் களவொழுக்கத்தில் புணர்ச்சியின்றிக் கழிதல் உண்டன்றோ? புறத்தார்க்குப் புலனாகும் எனும் அச்சங் காரணமாக ஒரு நாளிலோ இரண்டு நாளிலோ புணர்ச்சியின்றிக் கழிதல் உண்டு என்பதும் பொருந்தாது. அச்சம் நிகழின் அது வரைந்தெய்துதலுக்குத் துணை செய்யும். |