பக்கம் எண் :

444தொல்காப்பியம்-உரைவளம்

எனத் தோழியைச் சுட்டுதலும் கூறுதலும் தலைவியின் செயலாகும் என்றவாறு.

தன் வயின் வரூஉம் நன்னயமருங்கில் பன்னூறு வகையில் நாட்டம் வேண்டலின் துணையோர் கருமம் ஆதலான துணைச் சுட்டுக் கிளவி கிழவியதாகும் எனக் கூட்டுக.

துணைச் சுட்டுக் கிளவி என்பதற்குத் ‘துணையாவாள் இவள்” என்று குறிப்பினால் சுட்டுதலும் சொல்லால் கிளந் துரைத்தலும் எனக் கொள்க.

நன்னயமருங்காவது நல்ல விருப்பமான செயல்கள் மாற்றங்கள் முதலிய நிகழுமிடம் என்றவாறு. நல்ல செயல்கள் மகளிருடன் மகிழ்ந்து விளையாடுதல் முதலியன. நயச்செயல்கள் உணவு, நடை முதலியவற்றில் வரும் மாற்றங்கள். அம்மாற்றங்களைக் காணும்போது தலைவிக்கு வரும் நன்மைகளாகவே கருதுதலும் உடல் மெலிவு காணும்போது தெய்வ குற்றம் முதலியவாகக் கருதுதலும் போல்வன.

நாட்டம் வேண்டுதலாவது அவற்றைக் காணும்போது மகிழ்தலும் நீக்க வேண்டுவன வுளவாயின் அதற்கு முயல்தலும் போல்வன மேற்கொள்ளல். அந்நாட்டத்தால் தலைவிக்கு உரியன செய்தல் துணையோர் கருமம்.

துணையோர் என்றது தோழியை. துணையர்-துணையார்-துணையோர் என்றாயது.

நச்சினார்க்கினியர் ‘துணைச் சுட்டுக் கிளவி’ என்றதற்கு, தோழியும் செவிலியும் ‘இவள் ஒரு துணையுடையாள் எனச் சுட்டு மிடத்துக் கிளக்கும் கிளவி’ எனக்கொண்டு, இச்சூத்திரம், தோழி பல்வேறு கவர்பொருள் நாட்டம் உற்ற வழியும் செவிலி களவலராதல் முதலியவற்றால் நாட்டமுற்ற வழியும் தலைவி அறத்தொடு “நிற்கும் என்று அறத்தொடு நிலைக்கு இலக்கணம் கூறியவாறு” என்றார். துணையோர் என்றது தோழியையும் செவிலியையும் என்பது அவர் உரை.

செவிலியைத் துணை என்னும் வழக்கு இல்லையாதலானும் இதன் முன்னர் உள்ள ‘முந்நாளல்லது’ என்னுஞ் சூத்திரமும் ‘தோழியின் முடியும்’ என்னுஞ் சூத்திரமும் தோழி பற்றியன வாதலினாலும் இச்சூத்திரமும் தோழி பற்றிய செய்தியை உட்கொண்டெழுந்தது எனல் வேண்டுமாதலினாலும் அவர் உரை சிறவாது என்க.