இளம். இது தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : மேற்சொல்லப்பட்ட தோழி தான் சூழ்தற்கும் தலைவி சூழ்ச்சிக்கு உசாத்துணையாகியும் வரும் நிலைமையாற் பொலிவு பெறும் என்றவாறு. எனவே, செவிலி மகள் என்னுந் துணையாற் பொலிவு பெறாள்; என்றும் தோழியாவாள் செவிலிமகளாதலேயன்றிச் சூழவும் உசாத்துணையாகவும் வல்லள் ஆதல் வேண்டும் என்றவாறு. செய்யுள் மேற் காட்டப்பட்டன. நச். இதுவுந் தோழி சிறப்பினையே கூறுகின்றது. (இ-ள்) : உசாத்துணை நிலைமையின்-தலைமகனுந் தலைமகளும் உசாவுதற்குத் துணைமை சான்ற நிலைமையினாலே, சூழ்தலும் பொலிமே-புணர்ச்சி யுண்மையை ஏழுவகையானுஞ்1 சூழ்தற் கண்ணும் பொலிவு பெறும் என்றவாறு. எனவே இம்மூன்றும்2 நிலைக்குந் தோழி உரியள் என்றார். உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. வெள். இது தோழிக்கு இன்றியமையாததோர் இயல்பு உணர்த்துகின்றது. (இ-ள்) : மேற்குறித்த தோழியானவள் செவிலியின் மகள் என்ற அளவிலன்றித் தலைமகளைக் குறித்துத் தன் மனத்துள்ளே ஆராய்தற்கும், தலைமகளுக்குச் சூழ்ச்சித் துணையாக இருந்து அறிவுரை வழங்குதற்கும் உரிய தோழமை நிலைமையிற் பொலிவு பெற்று விளங்குவாள், எ-று. தோழியின் சிறப்பிலக்கணம் கூறும் இத்தொடரும் அவள் இன்ன தொடர்புடையாள் எனச் சுட்டும் மேலை நூற்பாவும்
1. ஏழுவகை: நாற்றம், தோற்றம், உண்டி, ஒழுக்கம், செய்வினை மறைப்பு, செயல், பயில்வு என்பன. (சூ.24) 2. மூன்று நிலை - செவிலி மகள், சூழ்தல், உசாதல். |