தொல்காப்பியனாரால் ஒரே சூத்திரமாக இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது, “தோழி தானே செவிலி மகளே சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே” என ஓர் எதுகையில் அமைந்து ஒரு பொருள் குறித்து வருதலால் இனிது புலனாகும். தோழியானவள் இவள் எனவும் அவளது சிறப்பியல்பு இதுவெனவும் பகுத்துரைக்கும் நோக்கில் இரு சூத்திரங்களாகப் பிரித்து உரை வரையப் பெற்றதெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். உசா-சூழ்ச்சி; இனிச் செய்ய வேண்டுவது யாது என எண்ணி ஆராயும் ஆராய்ச்சி. துணை-அவ்வாராய்ச்சிக்குத் துணையாயிருந்து அறிவுரை பகர்தல். செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றாகிய ‘பொலியும்’ என்பது ஈற்று மிசை யுகரம் மெய்யொடு ‘பொலிம்’ என நின்றது. “செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசையுகரம் மெய்யொடும் கெடும், (சொல். 238) எனவே செய்யும் என்னும் முற்றுச் சொல்லுக்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடும் கெடும், மெய்யொழித்தும் கெடும்” எனவரும் சேனாவரையர் உரை விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். சிவ. இச்சூத்திரம் தோழியானவள் தலைவியை ஆராய்தற்காரணம் கூறுகின்றது. (இ-ள்) : உசாவு நிலைமையாலும் துணையாகும் நிலைமையாலும் தோழியானவள் தலைவியை ஆராய்தலும் பொலிவு பெறும் என்றவாறு. உசாவுதல் தலைவி ஒன்றைப் பற்றித் தோழியுடன் கலந்து அளவளாவுதல். துணை தலைவிக்கு உடன் இருந்து நல்லன விளைதற்குத் துணையாதல். இவ்விரு நிலைகளும் தலைவி மாட்டுத் தோழிக்கு அமைதலின் தலைவியைத் தோழி ஆராய்வள் என்பதாம். தோழி ஆராய்தலாவது பின்னர் வரும் முன்னுறவுணர்தல் குறையுற வுணர்தல் இருவரும் உள்வழி அவன்வரவுணர்தல் போல்வனவற்றால் ஆராய்தல். உசாத்துணை நிலைமை என்பதை உசா நிலைமை துணை நிலைமை எனக்கூட்டி இருவகைப் படுத்துக. தொ.-29 |