பக்கம் எண் :

452தொல்காப்பியம்-உரைவளம்

எண்ணுதல் எண்ணென்றாற்போல முன்னுதல் ‘முன்’ என நின்றது. உயிர்கலந் தொன்றலிற் குறிப்பின்றியும் பாகமுணர்வாள்1 குறிப்புப் பெற்றுழி மிகவுணரும் என்று கொள்க. இது மூவர் மதியினையும் ஒன்றுபடுத்துதலின் மதியுடம்படுத்தலென்று பெயராயிற்று. இம்மூன்றுங் கூடிய பின்னரல்லது மதியுடம் படுத்தலின்றென்றற்கு ‘மூவகைத்து’ என்று ஒருமையாற் கூறினார்2 ‘முன்னுற’ என்றதனை ‘முந்துறவு3 என்றலோவெனின் குறையுறுதலான் உணர்தல் அவன் வருதலான் உணர்தலென்று இரண்டற்குங் காரணங் கூறுதலின் இதற்குங் குறிப்பு மிகுதலான் உணர்தலெனக்4 காரணங் கொடுத்தல் வேண்டுமென்றுணர்க. ‘நாற்றமுந் தோற்றமும் (114), என்பதனுட் கூறியவாறன்றி முன்னுறவை இடை வைத்தார். அவ்விரண்டினான் உணருங்காலும் இக் குறிப்பான் உணரவேண்டுமென்றற்கு. இம் மூன்றும் முற்கூறிற்றேனும் ஒரோவொன்றாற் கூட்டமுணரில் தலைவியை நன்கு மதித்தில ளாவளென்றற்கு இம் மூன்றும் வேண்டுமென்று ஈண்டுக் கூறினார்.5

(உ-ம்)

“கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல்
யானுமாடிக் காண்கோ தோழி”6       (பக்-487)


1. பாகம் உணர்வாள்-முழுமையாகவுணர்வாள். நன்றாக வுணர்வாள் எனினும் ஆம், சமையல் பாகமாக உள்ளது என்பது போல.

2. மூவகைய என்னாமல் மூவகைத்து என ஒருமையாற் கூறினார்.

3. முந்துறவு-முன்னைய உறவு.

4. முன்னம் மிகுதலான் என்பது காரணம்.

5. மூன்றில் ஒன்று கொண்டு தோழி உணர்ந்தாள் எனின் தலைவி ஒன்றனாலேயேயறியும் அத்துணை எளியள் ஆகிவிடுவாள். அதனால் தோழி அவளை நன்கு மதித்தாள் ஆகாள். எனவேமூன்றும் கொண்டு உணர்ந்தால் தான் தலைவியை நன்கு மதித்தாளாவாள்.

6. ஒளிவளை ஒலிக்க யானும் நீபாடிய சுனையில் ஆடிப் பார்ப்பேன் எனத் தோழி கூறுவது தலைவி சுனையாடிப் போந்தேன் அதனால் உடல் வெளுத்தது என்பது முதலிய கூறினாளாக அவளது கூற்றின் உட்கிடக்கையையறியத் தோழி இவ்வாறு கூறினாள். இப்படிக் கூறியது நாணத்துக்கு மாறுபட்டதன்று நாணம் உள்ள நிலையிலேயே கூறினாள்.