பக்கம் எண் :

456தொல்காப்பியம்-உரைவளம்

எனவரும் இறையனார் களவிய லுரையாகும். மதியுடம்படுப்பக் கூட்டம் உண்மையுணர்ந்த தோழி தலைவன் இரந்து பின்னின்ற பின்னன்றி அவன் குறையினை முடிப்பேன் எனக் கூறமாட்டாள் என்பதாம்.

இனி, ‘பின்னிலை முயற்சி பெறான்’ எனப் பாடங் கொண்டு ‘குறையுறவுணர்தல் முதலாக மூவகையுணர்வால் தலைமகளொடு தனக்குள்ள அன்புரிமைத் தொடர்பினைத் தோழி உணர வேண்டித் தோழியை இரந்து பின்னிற்கும் முயற்சியை மேற்கொள்ளப் பெறான்’ எனப் பொருள்வரைந்து, தலைவனது மறை பிறரறியா நிறையுடைமையைப் புலப்படுத்தியதாகக் கொள்ளுதலும் பொருந்தும்.

சிவ.

இச் சூத்திரம் தோழிக்குரியதோர் திறன் கூறுகின்றது.

(இ-ள்) : தோழி முன்னுற உணர்தல் முதலிய மூன்று வகையாலும் மதியுடம்பட்ட பின் அல்லது தலைவனின் இரந்து பின்னிற்கும் முயற்சியை ஏற்றுச் செயல்பட மாட்டாள் என்றவாறு.

இச் சூத்திரத்தில் ‘பின்னிலை முயற்சி பெறாள்’ எனப் பாடங் கொண்டு இளம்பூரணர் ‘இச் சூத்திரம் தோழிக்குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று” என்றதும், நச்சினார்க்கினியர் “பின்னிலை முயற்சி பெறான்” எனப் பாடங் கொண்டு இது மதியுடம் பட்ட பின்னல்லது தலைவன் கூற்று நிகழ்த்தப் பெறான் என்கிறது” என்றதும் பொருத்தமே. “தோழி தானே செவிலி மகளே” என்னுஞ் சூத்திர முதல் முயற்சிக் காலத்ததற்பட நாடிப் புணர்த்தலாற்றலும் அவள் வயினான” என்னும் சூத்திரம் வரையுள்ள ஐந்து சூத்திரங்களும் தோழிக்குரியனவாகவே கொண்டு இளம்பூரணர்கூற, நச்சினார்க்கினியர் இவ்வைந்தனுள் ‘அன்னவகையான்’ என்னும் சூத்திரம் மட்டும் இடையில் தலைவனுக்குரியதாகக் கொண்டு கூறியது அத்துணைச் சிறப்பின்று அதனால் இளம்பூரணர் ‘பெறாள்’ என்று கொண்ட பாடமே சிறக்கும். நச்சினார்க்கினியர் கருத்தும் கொள்ள வேண்டிப் பின்வருமாறு கொள்ளலாம். “பின்னிலை முயற்சி கொள்ளாள் என்னாது பெறாள் என்றதனால் தோழி அன்னவகையால் உணர்ந்தபின் அல்லது தலைவன் தோழியிடம் பின்னிலை முயற்சி பெறான் எனவும் கொள்ளலாம். கொள்ளுதல்-தானே கொள்ளுதல். பெறுதல்-பிறர் கொடுக்க வாங்குதல்.