எனவே, குறிப்பைக் கொள்ளாதவழி அக்குறிப்புரை நிகழாது என்றவாறாம். இதனாற் சொல்லியது கண்ட காலத்தே வேட்கை முந்துற்ற வழியே இக்கண்ணினான் வருங் குறிப்பு நிகழ்வது, அல்லாத வழி நிகழாது என்றவாறு. இனிக் குறிப்பு நிகழுமாறும் அதன் வேறுபாடும், மெய்ப்பாட்டியலுன் கூறுப. ஈண்டும் சில உதாரணம் காட்டுதும். “நோக்கினாள் நோக்கி இறைஞ்சினான் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.”1 (குறள்-1093) எனவும், “அசை இயற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினன் பைய நகும்”2 (குறள்-1098) எனவும் வரும், பிறவும் அன்ன. தலைமகன் குறிப்புத் தலைமகள் அறிந்த வழியும் கூற்று நிகழாது, பெண்மையான். நச். இது புணர்ச்சியமைதி கூறுகின்றது. (இ-ள்) : குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையையே, குறிப்புக் கொள்ளுமாயின்-தலைவி கருத்துத் திரிவு படாமற் கொள்ளவற்றாயின், ஆங்கு-அக்குறிப்பைக் கொண்ட காலத்து, அவை நிகழும் என்மனர் புலவர்-புகுமுகம் புரிதன் முதலாய் இருகையுமெடுத்தல் ஈறாகக் கிடந்த மெய்ப்பாடு பன்னிரண்டனுட் (261-263) பொறிநுதல் வியர்த்தல் முதலிய பதினொன்றும் முறையே நிகழுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. “அவ்சவை‘யும் பாடம். பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இருகையுமெடுத்தல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறிய
1. பொருள்: தலைவன் கூறியது. அவள் என்னைப் பார்த்தாள்! பார்த்து நாணத்தால் தலை கவிழ்ந்தாள். அச்செயலானது-அக்குறிப்பானது அன்புப் பயிர் வளர அவள் பாய்ச்சிய நீராயிற்று. 2. பொருள்: தலைவன் கூற்று. யான் அவளைப் பார்க்க அவள் மெல்ல நகுகிறாள்; அதனால் அந்த அசையும் (நுடங்கும்) இயல்புடையாட்கு அவ்விடத்து ஓர் நல்லெண்ணக் குறிப்பு உண்டு என்பது புலப்படும். |