ஓரிடத்து நிகழ்வதாகும். அதுவும் தலைவன் தற்செயலாகச் செல்பவன்போல் தலைவியின் மனையகத்துச் செல்லாத காலத்திலாம். மனையகத்துச் செல்லும் காலம் முன்னர் (17), “புகாஅக் காலைப் புக்கெதிர் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதி’க் என்பதிற் கூறினார். தலைவன் மனையகம் புகும் காலம் புணர்ச்சிக்கு இடையூறாகும்; அவன் பின்னர் வரைதற்கே முயல்வன் ஆதலின். நச்சினார்க்கினியர் இரவுக் குறிக் கூட்டமானது, வீட்டின் எல்லையில் மனையோர் பேசும் பேச்சுக் கேட்கும் அணிமையிலான இடத்தில் இரவின் முற்பகுதிக் காலத்தில் நிகழும் என்றும், இங்ஙனம் சில காலம் நிகழ்ந்த பின்னர் வீட்டினுள்ளும் இரவின் பிற்பகுதியில் நிகழும் என்றும் கொண்டு உரை கூறினார். இவர் கூற்றை வெள்ளைவாரணனார் பின்வருமாறு மறுப்பர்: “களவில் தலைவன் இரவுக்குறியில் மனையகம் புக்கதாக இவ்வுரையில் எடுத்துக் காட்டப்பட்ட அகநானூறு 102ஆம் பாடலில் ‘வீழாக்கதவம் அசையினன்’ என்பது அடிக்கடித் திறக்கப்படாத புறமனைக் கதவினையே யாதலின் அஃது ஆசிரியர் குறித்த இரவுக்குறிக்குரிய இடமாகவே கொள்ளற்பாலதாம். தலைவி இரவுக் குறியில் இல்வரைப்பினை’ கடந்து புறத்துப் போயினள் எனின், அஃது இரவுக்குறி எனப்படாது என்பதும், தலைவி மனையகத்தை நீங்கி மனைப்புறத்தே போகின்றாள் எனச் செவிலிக்கு அச்சம் நிகழ்ந்து அவள் துயிலாளாகிய பின்னரும் அச்சமின்றி மனையகத்துப் புணர்ச்சி நிகழும் என்பதும் அச்சமும் நாணமும் மடனும் உடைய தலைவியையும் பெருமையும் உரனும் உடைய தலைவனையும் மலரினும் மெலிதாகிய காமப்புணர்ச்சியின் செயலறியாத பொதுமக்கள் குழுவில் சேர்க்கும் ஆதலின் அவ்வுரை விளக்கம் ஏற்புடையதன்று என்று உணர்தல் வேண்டும்.” இம் மறுப்பு ஏற்புடையதுபோல் தோன்றினும் தலைவன் தலைவியர் இரவினும், பகலினும் கூடுவதும் பொதுமக்கள் செயல்போல்வதே யாதலின் ஏற்பதற்கில்லை. |