இளம். (இ-ள்) : அல்ல குறிப்படுதலுந் தலைமகட்கு உரித்து, தலைவன் செய்த குறி மயங்கிய பொருத்தத்தொடுவரின் என்றவாறு. உதாரணம் மேற்காட்டப்பட்டது. மயங்கிய அமைவு ஆவது-அவன் செய்யும் குறியோடமைவுடையன.1 நச். இது தோழி அல்ல குறிப்படுமாறு கூறுகின்றது. ‘இருவகைக் குறி பிழைப்பாகியவிடத்தும்’ என்புழித் தலைவி அல்ல குறிப்படுதல் கூறிற்று. (இ-ள்) : அவன் குறி-தலைவன் தன் வரவு அறிவிக்கும் கருவிகள், மயங்கிய அமைவொடுவரின்-அவன் செயற்கையானன்றி இயற்கைவகையானே நிகழ்ந்து தோழி மயங்கிய அமைதியோடே வருமாயின், அல்ல குறிப்படுதலும்-குறியிடத்துக் கூட்டுங்கால் அவ்வல்லவாகிய குறியிலே மயங்குதலும், அவள்வயின் உரித்து-அத் தோழியிடத்து உரித்து என்றவாறு. வெறித்தல் வெறியாயினாற் போலக் குறித்தல் குறியாயிற்று.2 அக்கருவி புனலொலிப்படுத்தல் முதலியன. (உ-ம்) “கொடுமுண் மடற்றாழைக் கூன்புற வான்பூ விடையு ளிழுதொப்பத் தோன்றிப் -புடையெலாந் தெய்வங் கமழுந் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் றெளியாக் குறி”3 (ஐந்-ஐம்-49) இஃது அல்ல குறிப்பட்டமை சிறைப் புறமாகக் கூறியது.
1. அவன் செய்யும் குறியோடு ஒத்து நிகழ்வன. அவை தலைவன் புள் எழுப்பாத நிலையில் ஏதோ ஒரு காரணத்தால் புட்கள் எழுந்து ஆர்ப்பரித்தலும், குளத்தில் கல்லெறிந்து ஒலியுண்டாக்காத நிலையில் குளக்கரையில் உள்ள மரத்தின் காய் வீழ்ந்த ஒலியெழுப்புதலும் போல்வன. 2. வெறி-வெறித்தல்-அதாவது வெறித்துப் பார்த்தல் அது போலக் குறித்தல் குறியாயிற்று. 3. கருத்து: பக்கம் 312-ல் காண்க. தொ-30 |