பக்கம் எண் :

466தொல்காப்பியம்-உரைவளம்

“எறிசுறா நீள்கட லோத முலாவ
நெறியிறாக் கொட்கு நிமிர்கழிச் சேர்ப்பன்
அறிவுறா வின்சொ லணியிழையாய் நின்னிற்
செறிவறா செய்த குறி”1      (திணை-ஐம்-43)

இஃது அவன் மேற்குறி செய்கின்றமை தலைவிக்குக் கூறியது.

“இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன்
கடுமான் மணியரவ மென்று-கொடுங்குழை
புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர்
உள்ளரவ நாணுவ ரென்று”2      (ஐந்-எழு-59)

இஃது இவன் இனி ஆண்டுவரிற் சுற்றத்தார் அறிவரென்றது.

“வீழ்பெயற் கங்குனின் விளியோர்த்த வொடுக்கத்தால்
வாழுநாள் சிறந்தவள் வருந்துதோள் தவறுண்டோ
தாள்செறி கடுங்காப்பிற் றாய்முன்னர் நின்சாரல்
ஊழுறு கோடல்போ லொல்வளை யுகுபவால்”3       (கலி-48)

இது தலைவற்குப் பிற்றை ஞான்று கூறியது.


1. கருத்து: என் அறிவினைவிட்டு நீங்காத இன்சொல்லையும் அணியிழையையும் உடைய தலைவியே! சுறா மீன் எறிந்து ஆடும் நீண்ட கடலலைகள் முன்னும் பின்னும் உலவ கழியிடங்களில் இறால் மீன் சுழலும் நிமிர்ந்த உப்பங்கழிச் சேர்ப்பன் நம் வீட்டின் புறத்தே செய்த இரவுக் குறியிடங்கள் நிறைதலை நீங்கா (ஆயினும் பயனில்லை.

2. கருத்து: பக்கம் 312-ல் காண்க.

3. கருத்து: தாழிட்டு அடைத்ததுபோலும் காவலிருக்கும் தாய் முன்னர் இவளது வளையல்கள் நின்மலைச் சாரலில் கோடல் மலர் வீழ்வதுபோல் வீழ்கின்றன. இதற்குக் காரணம் நின் வருகைக்காக நீ செய்யும் ஒலியை மழை பெய்யும் இரவில் கேட்டுக் கொண்டிருக்கும் அமைதியால் வாழும் நாள்களாற் சிறந்தவளான இவளது வருத்தம் மிக்க தோள்களிடம் தவறு ஏதேனும் உண்டோ?