இவை அல்ல குறிப்பட்டு நீங்குகின்றான் நெஞ்சிற்குக் கூறியன. வெள். இது மேற்கூறிய இருவகைக் குறிகட்கும் எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) : காதலர் இருவர் உள்ளத்தே உயர்ந்து வளர்தற்குரிய சிறப்பினதாகிய பேரன்பினைப் பேணி வளர்க்கும் காவலமைந்தன தனிமையிடமாகிய நிலைமைக்கண் அவ்வப்பொழுதும் இடமுமாகிய சூழ்நிலைக்கேற்ப, மறைந்த ஒழுக்கமாகிய களவிற் கூட்டம் நிகழ்தலும் உண்டு, எ-று. இரவுக்குறி பகற்குறி எனத் தம்மாற் குறித்துக் கொள்ளப்பட்ட இடங்களேயன்றி அவ்வாறு குறித்துக் கொள்ளப்படாது காதலர் இருவர் தனிமையிற் கண்டு அளவளாவுதற்கேற்ற சூழ்நிலையும் பாதுகாப்பும் உடையதாய்த் தன்னியல்பில் நேர்படும் இடமும் பொழுதும் களவிற் கூட்டம் நிகழ்தற்குரிய பகற்குறி இரவுக்குறிகளுக்குரிய குறியிடங்களாக அமைதலும் உண்டு என்பது இந் நூற்பாவிற் கூறப்படும் சிறப்பு விதியாகும். ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான ஆங்காங்கொழுகும் ஒழுக்கமும் உண்டு என இயைத்துப் பொருள் கொள்க. ஓங்கிய சிறப்பாவது, காதலர் இருவரது உள்ளமும் மேல்மேல் உயர்ச்சி பெறுதற்குரியதாய் அவ்விருவர் உள்ளத்தே கிளர்ந்து தோன்றும் பேரன்பாகும். ஒரு சிறை-பிறர் அறியாவாறு பாதுகாவலமைந்த தனியிடம். ‘ஒரு சிறை நெஞ்சோடுசாவுங் காலை’ (கற்பியல்-4) என்புழி ‘ஒரு சிறை’ என்னுஞ் சொல் ‘தனித்து’ என்ற பொருளில் வழங்கப் பெறுதல் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தருவதாகும். தலைவன் இயல்பு 133. | மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் | | துறந்த ஒழுக்கங் கிழவற்கு இல்லை (45) |
ஆ. மொ. இல. |