During the period of secret love, the lover has no life being deprived of play and festival with his lady-love. இளம். என்றது, தலைவற்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : களவொழுக்கத்து முகுர்த்தமும் நாளும் துறந்தொழுகும் ஒழுக்கம் தலைவற்கு இல்லை என்றவாறு. என்றதனான் ஆண்டு அறத்தின் வழுவினானல்லன், தலைவி மாட்டுத் தலையளி குறைதலான் என்றவாறு. நச். இது தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) : ஓரையும் நாளுந் துறந்த ஒழுக்கம்-தீய இராசியின் கண்ணுந் தீயநாளின் கண்ணுங் கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம், கிழவோற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை-தலைவற்குக் களவொழுக்கத்தின் கண் இல்லை. எனவே கற்பின்கணுள என்றவாறு. ஒழுக்கமாவது சீலமாதலிற் சீலங்காரணத்தால் துறப்பது தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்றாம். நாளாவது அவ்விராசி மண்டில முழுவதும், கிழத்தி துறந்த ஒழுக்கம் முந்நாளல்லதென (122) முற்கூறிற்று. இதனான் அன்பு மிகுதி கூறினார். இதற்குப் பிராயச்சித்தம் அந்தணர் முதலிய மூவர்க்கும் உண்மை ‘வந்த குற்றம் வழிகெட வொழுகலும்’ (146) எனக் கற்பியலிற் கூறுப. வெள். இது களவொழுக்கத்தின் கண் தலைமகனுக்காவதோர் கடமை யுணர்த்துகின்றது. (இ-ள்) : உலகத்தார் அறியாது காதலர் இருவரும் மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவொழுக்கம் காரணமாகத் தான் மேற்கொள்ளுதற்குரிய விளையாட்டும் விழாவும் ஆகிய சிறப்புடைய நிகழ்ச்சிகளை நீங்கியொழுகும் ஒழுகலாறு தலைவனுக்கு இல்லை,எ-று. மறைந்த ஒழுக்கம் என்றது களவொழுக்கத்தினை. ஓரை என்னும் சொல் விளையாட்டு என்னும் பொருளில் வழங்கும் |