தனித்தமிழ்ச் சொல்லாகும். ‘கோதை யாயமொடு ஓரைதழீஇ (அகம் 49) எனவும், ‘ஓரையாயம்’ (அகம் 219, குறுந். 48) எனவும்) விளையாடாயத்து ஓரையாடாது (நற்-2) எனவும் ஓரை என்னுஞ் சொல் விளையாட்டு என்னும் பொருளில் சங்கச் செய்யுட்களில் பயின்றுள்ளமை காணலாம். இந்நூற்பாவில் இடம் பெற்றுள்ள ‘ஓரை’ யென்னுஞ் சொல்லும் விளையாட்டு என்னும் பொருளிலேயே ஆளப் பெற்றுள்ளமை கூர்ந்துணர்தற்குரியதாம். நாள்-திருவிழா. ‘மாயோன் மேய ஓண நன்னாள்’ (மதுரைக் காஞ்சி 591) எனவும், ‘ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் (தேவாரம் 3-47-4) எனவும் நாள் எனபது திருவிழா என்னும் பொருளிற் பயில வழங்குதல் இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும். தலைவன் தான் விரும்பி மேற்கொண்டொழுகும் களவொழுக்கம் காரணமாகத் தான் தன் தோழர்களுடன் தவறாது கலந்து கொள்ளுதற்குரிய சிறப்புடைய விளையாட்டினையும் ஊர் மக்கள் பலரும் காணத் தான் மேற்கொண்டு நிகழ்த்துதற்குரிய திருவிழாச் செயல்முறைகளையும் கைவிட்டு விலகியொழுகுவானாயின் அந்நிகழ்ச்சிகளில் அவன் கலந்து கொள்ளாமைபற்றி அவனைக் குறித்துப் பலரும் வினவாநிற்க, அது காரணமாக அவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாம் ஆதலின் களவொழுக்கம் ஒழுகுந் தலைவன் ஓரையும் நாளும் ஆகிய இவற்றை நீங்கி ஒழுகுதல் கூடாது எனத் தலைவனுக்குரிய இன்றியமையாத கடமையினை வற்புறுத்தும் நிலையிலமைந்தது இந்நூற்பாவாகும். சிவ. இச்சூத்திரம் ஓரை நாள் இவற்றின் காரணமாகத் தலைவியைத் தலைவன் காணாது நீங்கி யொழுகும் ஒழுக்கம் தலைவனுக்கு இல்லை என்கின்றது. (இ-ள்) : மறைந்த வொழுக்கமாகிய களவொழுக்கத்தில் ஓரையினாலும் நாளினாலும் தலைவன் தலைவியைக் காணாது நீங்கியொழுகும் செயல் தலைவனுக்கு இல்லை என்றவாறு. ஓரை-முழுத்தம். நாள்-நாண்மீன். அவை இரண்டும் ஈண்டுத் தீய ஓரையையும் தீயநாளினையும் உணர்த்தும். துறந்து ஒழுகுதல் என்பது நல்லோரைக்கும் நன்னாளுக்கும் ஏலாது. இயற்கைப் புணர்ச்சியன்று இருவரும் ஒருவரையொருவர் காணவேண்டும் என்ற உணர்வின்றித் தற்செயலாய் ஒரு பொழிலகத்து எதிர்ப் |