பக்கம் எண் :

476தொல்காப்பியம்-உரைவளம்

படுதலின் தலைவனுக்கு அன்று ஓரையும் நாளும் கருதும் எண்ணமேயில்லை. இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்த் தொடர்ந்து இடந்தலைப்பாடு முதலியன நிகழ்தலின் இருவர்க்கும் ஒருவரையொருவர் கண்டு அளவளாவுவதிலேயே நாட்டமுண்மையின் ஆங்காங்கும் ஓரையும் நாளும் நினைத்தற்கில்லை. எனவே களவொழுக்கத்தில் யாண்டும் அவற்றை நினைத்தற்கு இடம் இல்லை.

ஓரை, நாள் என்பனவற்றுக்கு இளம்பூரணர் பொதுவாக நல்லோரை தீயவோரை, நல்லநாள் தீயநாள் என்பனவற்றைக் கொண்டு அவற்றை கருதாமல் களவொழுக்கம் கொள்ளுதல் தலைவனுக்கு இல்லை எனப் பொருள் கொண்டார். அதனால் நல்லோரை நன்னாள்கருதியே ஒழுகுவான் என்று கூற வேண்டி.

“என்றதனால் ஆண்டு அறத்தின் வழுவினானல்லன்
தலைவி மாட்டுத் தலையளி குறைதலான் என்றவாறு”

என எழுதினார்.

நச்சினார்க்கினியர் ஓரை நாள் என்பனவற்றிற்குப் பின்னர் வரும் ‘துறந்த ஒழுக்கம்’ என்பதற்கேற்பத் தீயவோரை தீய நாள் எனக் கொண்டார். இதுபொருந்துவதே.

வெள்ளை வாரணனார் ஓரை என்பதற்கு ‘விளையாட்டு’ என்றும், நாள், என்பதற்கு ‘விழா’ என்றும் பொருள் கொண்டு, களவொழுக்கத்தில் தலைவன் நண்பருடன் கூடி விளையாடும் விளையாட்டையும் ஊரவருடன் கூடி மகிழும் திருவிழாவையும் துறந்து ஒழுகும் ஒழுக்கம் இல்லை எனப் பொருள் எழுதினார்.

ஓரை என்பது விளையாட்டுப் பொருளில் வந்துள்ளமைக்கு அவர் காட்டிய “கோதையாயம் ஓரைதழீஇ” (அகம் 49), ஓரையாயம் (அகம்-219, குறுந்-48) என்னும் இலக்கியச் சான்றுகள் பொருந்துவன. ஆனால் நான் என்பது திருவிழாப் பொருளில் வந்ததற்கு ‘மாயோன்மேய ஓண நன்னாள்’ (மதுரை-591), ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் (தேவா 3-47-4) என்னும் இலக்கியச் சான்றுகள் அத்துணைச் சிறப்பினவல்ல. ஓணநாள், ஆதிரை நாள் என வந்தன அவ்வந் நாள்களில் நடத்தப்பெறும் விழாக்களைக் குறிப்பன. தனித்து நாள் எனும் சொல் ‘விழா’ எனும் பொருளில் வந்தமைக்குச் சான்று வேண்டும்.