பக்கம் எண் :

களவியல் சூ. 49 481

இளம்.

என்றது களவு வெளிப்படுப்பார் அவர் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : அம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவரொருவர் முகக்குறிப்பினாற் றோற்றுவித்தல். அலராவது சொல்லுதல். அதனானே இவை இரண்டும் களவினை வெளிப்படுத்தலின் அதற்குக் காரணமாவான் தலைவன் என்றவாறு. என்னை, அவனை யறிந்துழியல்லது இவை நிகழாமையின், தலைவி வேறுபாட்டான் ஆகாதோ எனின், ஆண்டு எற்றினான் ஆயிற்று என ஐயம் நிகழ்தலல்லது துணிவு பிறவாதாம் என்று கொள்க.

நச்.

இது களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைமகனென் கின்றது.

(இ-ள்) : அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின்- முகிழ்த்தலும் பலரறியச் சொல் நிகழ்த்தலுங் களவொழுக்கத்தினை வெளிப்படுத்தலான். அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும்-அவ்விடத்து அவ்வெளிப்படை நிகழ்த்துதற்கு நிமித்தமாயினான் தலைமகனாம் என்றவாறு.

தலைவனை அறிந்த பின் அல்லது முற்கூறிய ஐயம் நிகழா மையின் தலைவி வருத்தம் நிமித்தமாகா. ஆண்டு ஐயம் நிகழ்த லன்றித் துணிவு தோன்றாமையின். வரைவு நீட்டிப்போனுந் தலைவி தமர்க்குக் கூறி வெளிப்படுப்போனுந் தலைவனே என்றுணர்க. அது,

“நீரொலித் தன்ன பேஎர்
அலர்நமக் கொழிய அழப்பிரிந்தோரே”      (அகம்-211)

“நெறியறி செறிகுறி புரிதிரி பறியா
வறிவனை முந்துறீஇ      (கலி-39)

என்றாற்போல வருவனவும் பிறவும் வெளிப்படையாமாற்றாற் கண்டுணர்க.

தொ-31