இளம். இது வரையும்பகுதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : களவு வெளிப்பட்டபின் வரைதலும் களவு வெளிப் படாமை வரைதலும் என அவ்விரண்டென்று சொல்லுவர் வரையும் நெறி என்றவாறு. இதனால் சொல்லியது இருவாற்றானும் அறன் இழுக்கா தென்றவாறு. அஃது இழுக்காதவாறு வருகின்ற சூத்திரத்தான் உணர்க. நச். இது வரையும்பகுதி இனைத்தென்கின்றது. (இ-ள்) : வெளிப்பட வரைதல்-முற்கூறிய வாற்றானே களவு வெளிப்பட்ட பின்னர் வரைந்து கோடல், படாமை வரைதல்-அக் களவு வெளிப்படுவதன் முன்னர் வரைந்து கோடல், என்று ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே-என்று கூறப்பட்ட அவ்விரண்டே என்று கூறுவர் ஆசிரியர் வரைந்து கொள்ளும் வழியை என்றவாறு. “சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே” (கலி-39) இது வெளிப்பட்ட பின் வரைவு நிகழ்ந்தது1 “கொல்லைப் புனத்த வகில்சுமந்து கற்பாய்ந்து வானி னருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதனா னீப்பினும் வாடன் மறந்தன தோள்”2 (ஐந்-எழு.2) இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது.
1. ‘அம்பலும் களவுப் புணர்ச்சியும் எல்லாம் நீங்கும்படி வெற்பனும் வந்தான் இனிக் கண்ணும் பொலிக’ என்றதில் அலர்நீங்க வெற்பன் வரைவொடு வந்தான் என்பதால் களவு வெளிப்பட்ட பின் வரைதலாயிற்று. 2. இதில் நாடன் நயன் உடையன் என்பதனால் என்தோள்கள் அவன் பிரிந்திருந்த காலங்களில் வாடலை மறந்தன |