இவ்விருவகைப் புணர்ச்சிப்பின்னர்க் களவின்றி வரைந்து கோடல் கடிதில் நிகழ்தலுண்மென்பதூஉம் உணர்த்துகின்றது. (இ-ள்) : பெருமையும்-அறிவும் ஆற்றலும் புகழுங் கொடையும் ஆராய்தலும், பண்பும், நண்பும், பழிபாவ மஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும், உரனும்-கடைப் பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும், ஆடூஉ மேன-தலைவன் கண்ண என்றவாறு. இதனானே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலக வழக்கும், மெய்யுறு புணர்ச்சி நிகந்துழியுங் களவு நீட்டியாது வரைந்து கோடலும், உள்ளஞ் சென்றுழி யெல்லாம் நெகிழ்ந்தோடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும், மெலிந்த உள்ளத்தானாயுந் தோன்றாமல் மறைத்தலுந் தீவினை யாற்றிய பகுதியிற் சென்ற உள்ளம் மீட்டலுந் தலைவற்கு உரியவென்று கொள்க. (உ-ம்) “சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின் பாலுய்ப்ப தறிவு.”1 (குறள்-422) பெருமை நிமித்தமாக உரன் பிறக்கும். அவ்வுரனான் மெய்யுறு புணர்ச்சி இலனாதலும் உரியனென இதுவும் ஓர் விதி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறு புணர்ச்சி நடக்கும் வேட்கை நிகழாமைக்கும் காரணம் மேற்கூறுப. இனி இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி இடந்தலைப் பாட்டின்கண் வேட்கை தணியாது நின்று கூடுபவென்றும், ஆண்டு இடையீடு பட்டுழிப் பாங்கனாற் கூடுபவென்றும் உரைப்போரும் உளர்2. அவர் அறியாராயினார்; என்னை? அவ்விரண்டிடத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தே கூடவேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சியெனப் பெயர் கூறலன்றிக் காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் பாங்கொடுதழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறாரென்றுணர்க.
1. கருத்து. மனதைச் சென்றவிடமெல்லாம் செல்ல விடாமல் தீமையினின்றும் நீக்கி நல்லதன்கண் செல்ல விடுவது அறிவாகும். 2. கூறுவோர் இளம்பூரணர். |