(இ-ள்) : அச்சமும் - அன்பு காரணத்திற்றோன்றிய உட்கும். நாணும் - காமக்குறிப்பு நிகழ்ந்த வழிப் படுவதோர்’ உள்ளவொடுக்கமும், மடனும்-செவிலியர் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையும், முந்துறுத்த-இம்மூன்று முதலியன. நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப-எஞ்ஞான்றும் பெண் பாலார்க்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. ‘முந்துறுத்த’ என்றதனாற் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத பயிர்ப்பும், செயத்தகுவது அறியாத பேதைமையும், நிறுப்பதற்கு நெஞ்சுண்டாம் நிறையுங் கொள்க. மடன் குடிப் பிறந்தோர் செய்கையாதலின் அச்சமும் நாணும் போல மெய்யுறு புணர்ச்சியை விலக்குவதாம். தலைவி உடையளெனவே, தலைவன் பெருமையும் உரனும் உடையனாய் வேட்கை மீதூரவும் பெறுமாயிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப் புணர்ச்சிக்கு உரியளல்லளாமாயினும் இவ்விலக்கணத்தில் திரியாது நின்றேயும் புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடும் கூறினார். இவற்றானே புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் தலைவனைப் போல ஆற்றுவாளாயிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாங் கந்தருவமென்பது1 வேதமுடிபாதலின் இவ்வுள்ளப் புணர்ச்சியுங் கந்தருவமாம். ஆதலான் அதற்கு2 ஏதுவாகிய பெருமையும் உரனும் அச்சமும் நாணும் போல்வன கூறினார். இச்சூத்திரம் இரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உலகியல் வழக்கே கூறலின் இக்கந்தருவம் இக்களவியற்குச் சிறப்பின்று, இனிக் கூறுவன மெய்யுறு புணர்ச்சி பற்றிய களவொழுக்கமாதலின். வெள். இது, தலைமகட் குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) : தனது நிறை காவலுக்கு இடர் நேருமோ வென்னும் அச்சமும் பெண்மையியல்பாகிய நாணமும். தான் மேற்கொண்ட கொள்கையை நெகிழ விடாமையாகிய மடனும் முற்பட்டுத் தோன்றுதல் எக்காலத்தும் பெண்டிர்க்குரிய இயல்பாகும் என்பர் ஆசிரியர். எ-று.
1. இருவர் கண்ணுற்றுக் காதல் மிக்காராயின் அதுவே புணர்ச்சியாம் என்பது வேத முடிவு. கந்தருவம்-கந்தருவரது புணர்ச்சி. 2. அதற்கு-உள்ளப் புணர்ச்சிக்கு |