வேட்கையாவது-பெறல் வேண்டுமென்னும் உள்ள நிகழ்ச்சி ஒருதலையுள்ளுதலாவது-இடை விடாது நினைத்தல். “உள்ளிக் காண்பென்போல்வன முள்ளெயிற்று அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில் ஆரம் நாறும் அறல் போற் கூந்தற் பேரமர் மழைக்கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே” 1 (குறுந். 286) மெலிதலாவது-உண்ணாமையான் வருவது, ஆக்கஞ் செப்பலாவது-உறங்காமையும் உறுவஓதலும் முதலாயின கூறுதல். “ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித்திரை போல இரவினானுந் துயிலறி யேனே”2 (ஐங்குறு. 172) எனவரும். நாணு வரையிறுத்தலாவது-நாண் நீங்குதல் “காமம் விடுவொன்றோ நாண் விடு நல்நெஞ்சே யானோ பொறேனிவ் இரண்டு”3 (குறள் 1247) நோக்குவ எல்லாம் அவையே போறலாவது-தன்னாற் காணப்பட்டன எல்லாந் தான் கண்ட உறுப்பு போலுதல்.
1. பொருள்: முட்போலும் பல்லையும், செவ்வாயையும், அகிலும் சந்தனமும் நாறும் அறற்கூந்தலையும், கருங் கண்களையும் உடைய கொடிச்சியின் முறுவலொடு மதர்த்த நோக்கினையும் நாளும் நினைத்துக் கண்டு கொண்டிருப்பேன்-தலைவன் கூற்று. 2. பொருள்: தொடியணிந்த அரிவை என் நெஞ்சைக் கொண்டாள். அதனால் யான் தொண்டியில் கடலானது இரவினும் பகலினும் ஓயாது ஒலிப்பது போல இரவிலும் துயிலாதவனானேன்-தலைவன் கூற்று. 3. பொருள்: என் மனமே! அவள் பால் கொண்ட காமத்தை விடு அல்லது நாணத்தை விடு. இவ்விரண்டையும் கொண்டால் யான் தாங்க மாட்டேன்-தலைவன் நெஞ்சுக்குக் கூறியது. |