“ஓங்கெழிற் கொம்பர் நடுவிதெனப் புல்லுங் காந்தட்கிவரும் கருவிளம் பூக்கொள்ளும் மாந்தளிர் கையில் தடவருமாமயில் பூம் பொழினோக்கிப் புகுவன பின்செல்லுந் தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடும் நீள் கதுப்பிஃ தென நீர் அறல் உட்புகும்”1 என்றாற் போல்வன. மறத்தல்-பித்தாதல், மயக்கமாவது-மோகித்தல். சாக்காடு-சாதல், இவற்றுள் சாதல் பத்தாம் அவத்தை யாதலால், ஒழிந்த எட்டுங் களவு நிகழ்தற்குக் காரணமாம் என்று கொள்க. இது தலைமகட்கும், தலைமகற்கும் ஒக்கும். இவற்றிற்குச் செய்யுள் வந்துழிக் காண்க. நச். இது முதலாகக் களவிலக்கணங் கூறுவார் இதனான் இயற்கைப் புணர்ச்சி முதற்களவு வெளிப்படுந் துணையும் இருவர்க்கும் உளவாம் இலக்கணம் இவ்வொன்பதுமெனப் பொது விலக்கணங் கூறுகின்றார். (இ-ள்) : ஒருதலை வேட்கை-புணராத முன்னும் புணர்ந்த பின்னும் இருவர்க்கும் இடைவிட்டு நிகழாது ஒரு தன்மைத்தாகி நிலைபெறும் வேட்கை, ஒருதலை உள்ளுதல்-இடைவிடாது ஒருவர் ஒருவரைச் சிந்தியா நிற்றல், மெலிதல்-அங்ஙனம் உள்ளுதல் காரணத்தான் உடம்புவாடுதல், ஆக்கஞ் செப்பல்-யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்கமாக நெஞ்சிற்குக் கூறிக் கோடல், நாணு வரையிறத்தல்-ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி அதன் வரையிறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல்-பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாந் தன மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றாரெனத் திரியக் கோடல், மறத்தல்-விளையாட்டு
1. பொருள். என் நெஞ்சமானது அழகிய கொம்பைக் கண்டு அவளின் இடை எனத் தழுவும்; காந்தள் கருவிளம் பூக்களைக் கைவிரல்கள் எனக் கொள்ளும்; மாந்தளிரை மேனியெனத் தடவும்; பொழில் நோக்கிப் புகும் மயிலின் பின் அவள் சாயலை நினைந்து செல்லும்; மூங்கிலை அவள் தோள் எனத்தொடும்; நீரில் அறல் மணலை அவள் கூந்தல் என நீருள் புகும். |