பக்கம் எண் :

64தொல்காப்பியம்-உரைவளம்

(இ-ள்) : இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் நிகழ்வன.

வேட்கை-ஒருவரை யொருவர் அடைய வேண்டும் என்னும் விருப்பம்.

ஒருதலை யுள்ளுதல்-ஒருவரை யொருவர் அவ்வேட்கையால் இடையீடின்றி நினைத்தல்.

மெலிதல்-அந்நினைப்பு நீடுதலால் உடன் அடைய இயலாமையால் உள்ளம் உடம்பு மெலிதல்.

ஆக்கம் செப்பல்-அக்காட்சிக் காலத்து நிகழும் உணர்வு களையும் செயல்களையும் தம் வேட்கைக்கு ஆக்கமாகவே கருதித் தம் நெஞ்சுக்குக் கூறுதல்.

நாணுவரையிறத்தல்-நாணம் நீங்குதல்.

நோக்குவ எல்லாம் அவையே போறல்-ஒருவரை ஒருவர் பார்க்கும் போது இருவர் மாட்டும் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் தத்தமக்கு ஆதரவான நிகழ்ச்சிகளாகவே தோன்றுதல்.

மறத்தல்-தத்தம் பிறப்பு குடிமை முதலியவற்றை மறத்தல்.

மயக்கம்-தம்மை மறத்தல்.

சாக்காடு-இதுவரையும் ஒருவரையொருவர் அடையாமையால் ஏற்படும் செயலற்றவுணர்வு.

இவை யாவும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் நிகழும் உணர்வுகளாம், இவ்விடத்துத் தலைவனுக்குப் பேச்சு நிகழாது. இதன் பின்னரே தலைவன் ‘முன்னிலையாக்கல், மெய்தொட்டுப் பயிறல்’ முதலிய பேச்சுகளால் தலைவியை நெருங்கிப் புணர்வான்.

இனி இயற்கைப் புணர்ச்சிப் பின்னர் நிகழும் இடந்தலைப்பாடு முதலியவற்றுக்கு வேட்கை முதலியன ஆமாறு:

வேட்கை - புணராத முன்னிருந்த வேட்கை புணர்ந்த பின்னரும் குறையாதிருத்தல்.

ஒருதலை யுள்ளுதல்- இடைவிடாது ஒருவரையொருவர் நினைத்தல்.

மெலிதல் - அவ்வப் புணர்ச்சிப் பின்னர் நிகழும் பிரிவுகளால் மெலிவுறுதல்.