மெலிவு விளக்குறுத்தலாவது-தலைவன் அகத்துறும் நோயாற் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக் கூறலும். உதாரணம் வந்துழிக் காண்க. குறிப்பாவன:-புறத்துறுப்பாயவர்க்கின்றியமையாதன. தன்னிலையுரைத்தலாவது-அப் புறநிகழ்ச்சியின் பொலி விழவைக் கண்ட தலைமகள் மாட்டுத் தலைவன் தன் உள்ள வேட்கை மீதூர்வினை நிலைப்படக் கூறுதல் “சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்” என்னும் நற்றிணைப் பாட்டுள், காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ ...................................................... ......................கடைமணி சிவந்த நின் கண்ணே கதவ அல்ல” (நற்றிணை 39) எனத் தன்னிலையுரைத்தவாறு காண்க. தெளிவு அகப்படுத்தலாவது-தலைவன் முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சியினை விழைந்து நின்றானாக, அப் புணர்ச்சியினைக் கூறுவார். முன்னம் ஒத்த பண்புடைமை உள்ளத்து இருவர் மாட்டும் வேண்டுதலின் தலைமகள் பண்பினைத் தலைவன் அறிந்து அத் தெளிவை தன்னகப்படுத்துத் தேர்தல். “யாயும் ஞாயும் யாரா கியரோ” (குறுந்-40) என்னும் குறுந்தொகைப் பாட்டுள், “அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே”. என இயற்கைப் புணர்ச்சி முன்னர்த் தலைவன் தலைவியர் உள்ளம் ஒத்த பண்பினைக் கூறியவாறு காண்க. இதுகாறும் இயற்கைப் புணர்ச்சிக்குரிய திறன் கூறி, மேல் இயற்கைப் புணர்ச்சி நிகழுமாறு கூறுகின்றார். அஃதேல் தன்னிலை யுரைத்தலைத் தெளிவகப்படுத்தலுடன் இணைத்து மெய்யுறு புணர்ச்சியாக்கிய பின்னர்த் தோன்றும் துறையாகப் படுத்தாலோ எனின் அது சான்றோர் வழக்கின்றாதலானும், மெய்யுறு புணர்ச்சி முன் “மெய் தொட்டுப் பயிறல்”. (களவியல்-11) முதலியன யாண்டும் நிகழ்ந்தே தலைவிக்கு மெய்யுறு புணர்ச்சி நிகழுமாதலானும் அஃதன்றென்க. |