“பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரிதாகிய தண்டாக் காமமொ டுடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவே மாகிய வுலகத் தொருவேமாகிய புன்மைநா முயற்கே” 1 (குறுந்-57) முற்பிறப்பில் இருவேமாய்க் கூடிப் போந்தனம். இவ்வுலகிலே இப்புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேறாயுற்ற துன்பத்து இன்று நாமே நீங்குதற்கெய்திய பிரிவரிதாகிய காமத்துடனே இருவர்க்கும் உயிர் போவதாக, இஃதெனக்கு விருப்பமென்றான், என்பதனால் தந்நிலை யுரைத்தலும் பிரிவச்சமுங் கூறிற்று. “குவளை நாறுங் குவையிருங் கூந்த லாம்பனாறுந் தேம்பொதி துவர்வாய்க் குண்டுநீர்த் தாமரைக் கொங்கினன்ன நுண்பஃறுத்தி மாஅயோயே நீயே, அஞ்சலென்றவென் சொல்லஞ்சலையே யானே, குறுங்காலன்னங் குலவுமணற் சேக்குங் கடல் சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யானின்னுடை நட்பே” 1 (குறுந்-300)
1. கருத்து: தோழீ! உயிர் ஒன்றாய் உடல் இருவேறாகி யமைந்தேமாய் இருக்கும் இவ்வுலகில் பிரிவால் ஒருவராகிய புன்மை (துன்பம்) நீங்கி உய்தல் வேண்டி, நீர்வாழ் மகன்றில் பறவைகள் தம் இடையே ஒருபூ இருப்பினும் அக்காலம் ஓராண்டு பிரிவுக் காலமாக உணரும்படியான நிலையில் அமைந்த எம்காமமொடு அவர் பிரிந்தவுடன் உயிர் போவதாக. 2. கருத்து: கூந்தலும் துவர்வாயும் அணங்கும் உடைய மாயோயே! நீ அஞ்சேல் என்று புணர்ச்சிப் பின் யான் கூறிய சொல்லை ஐயப்படாதே. கடல்சூழ் உலகம் முழுதும் நின்னைப் பிரிவதால் கிடைப்பதாயினும் நின் நட்பை யான் பிரியேன். பிரிவுக்கு அஞ்சல் என்றது பிரிவுண்டு என அச்சம் தோற்றுவித்தது. உலகம் பெறினும் நட்புப் பிரியேன் என்றது நயப்பு உணர்த்தியது. வன்புறையுமாம். |