ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறியது. இதன் கண் ஆயத்துய்த்தமையும் பெற்றாம். இனி வேட்கை யொருதலை (100) என்னுஞ் சூத்திரத்திற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சிமேல் நிகழ்த்துதற்கு அவத்தை கூறினாரென்றும் இச் சூத்திரத்தைத் தலைவியை நோக்கி முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சி புணருமென்றுங் கூறுவாரும் உளர்.1 அவர் அறியார்; என்னை ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழுமெனின் ஆண்டுக்2 கூறிய மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம். அன்றியும், ஆறாம் அவதி கடந்து வருவன அகமன்மை மெய்ப்பாட்டியலிற் கூறலிற் பத்தாம் அவத்தையாகிய சாக்காடெய்தி மெய்யுறு புணர்ச்சி நடத்தல் பொருந்தாமையுணர்க. இனித் தலைவியை முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் புணருமெனின் முன்னர்க் ‘கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும்,1 (96) எனக் கண்ணாற் கூறிக் கூடுமென்றலும் ‘இருகையுமெடுத்தல்’ (263) எனப் பின்பு கூறுதலும் பொருந்தாவாம். அன்றியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறிப் பிரிய வேண்டுதலானும் அது பொருந்தாதாம். வெள். இது இயற்கைப் புணர்ச்சிக் குரியதோர் திறன் கூறுகின்றது. (இ-ள்) : தனியிடத்தே தலைமகளை எதிர்ப்பட்ட தலைமகன் தனது பெருமையும் உரனும் நீங்க வேட்கை மீதூர்தலால் மெய்யுறு புணர்ச்சியை வேண்டினானாயினும் தலைமகள்பால் இயல்பாகத் தோன்றும் அச்சமும் நாணமும் மடனும் அதற்குத் தடையாய் முந்துற்று நிற்பனவாதலின் அத்தடைகள் நீங்குதற் பொருட்டுத் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில மொழிகளைக் கூறுதலும், தான் கூறும் அச்சொல்லின்வழி அவள் நிற்கும் படிச் சில சொற்கூறுதலும். அவளது நலத்தினை எடுத்துரைத்தலும் அது கேட்ட தலைமகள்பால் நகை மிகுந்துத் தோன்றாது முறுவற் குறிப்புத் தோன்றிய அந்நிலையினைக் கூர்ந்து அறிதலும், தன் அகத்தே நிகழும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பால் விளக்குதலும், தன் உள்ளத்து வேட்கை மீதூர்தலை நிலைப்படச் சொல்லுதலும் தலைமகளது உள்ளப்
1. இளம்பூரணர் 2. மெய்ப்பாட்டியலில் 13-15சூ. (புகுமுகம் புரிதல் முதலியன). |