பக்கம் எண் :

8தொல்காப்பியம்-உரைவளம்

இது தோழியிற் கூடிய தலைமகன் கூற்று.

“அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி மடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட மறவல் வயங்கிழைக்கு
யானிடை நின்றபுணை1      (ஐந்திணையெழு-1)

இதனானே முந்துற்ற கூட்டமின்மையுணர்க. இனி ஒரு கூட்டமும் நிகழாது ஆண்டு வந்தடைவேட்கை இருவர்க்கும் தணியாது நின்று வரைந்தெய்தலும் ஒன்று. இவ்வகையினான் இக்களவொழுக்கம் மூவகைப்படும்.2

“இன்பமும்..........இயல்பே” என்பது சூத்திரம்.

இனி, இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், காமப் புணர்ச்சிக்கு இலக்கண வகையாற் குறியிடுதலை உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்) இன்பமும் பொருளு.......காணுங்காலை என்பது-இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப்பட்டு, அன்பொடு புணர்ந்து நடுவண் ஐந்திணையிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங் காலத்து என்றவாறு.

அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றதனால் கைக்கிளை பெருந்திணையை3 ஒழித்து நின்ற முல்லை, குறிஞ்சி, பாலை,


1. தோழி தலைவனிடம் ‘கானக நாட! யான் விளங்கும் இழையணிந்துள்ள தலைவிக்கு இடையேயுள்ள புணையாவேன்; மறவாதே’ என்றதால் இதற்கு முன்னர்ப் புணர்ச்சி நிகழவில்லை என்பது பெறப்படும்.

2.1. இயற்கைப் புணர்ச்சிப் பின்னர் வரைந்தெய்துதல்.
 2. இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் நிகழ்ந்த பின்னர் வரைந்தெய்துதல்
 3. காட்சியளவில் நீங்கிப் புணர்ச்சியின்றி வரைந்தெய்துதல்.

3. கைக்கிளை ஒருவர் அன்பு ஒருவர்க்குப் புலனாகாமையின் அன்பொடு புணர்ந்ததன்று. பெருந்திணை அன்பின்றிக் காமம் காரணமாகக் கூடுவதும் அன்பெல்லையைக் கடந்து மிக்க காமத்தால் கூடுவதும் ஆதலின் அன்பொடு புணர்ந்ததன்று.