தீராத் தேற்றமாவது-இயற்கைப் புணர்ச்சியுடன் முடியாத தெளிவு.* “வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்”1 (குறள்-1105) இஃது இயற்கைப் புணர்ச்சித் துறையன்று. இடந்தலைப் பாட்டின் கண் தலைமகன் கூறியது. நுகர்ச்சி பெற்றது. “கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள”2 (குறள்-1101) என்பதோ எனின், இயற்கைப் புணர்ச்சிக்கண் நுகர்ச்சியுற்றமை கூறிற்று என்க. “எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் நன்முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறுஞ் செந்நெல்வான் பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை நேர் இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோடுற்ற சூளே”3 (குறுந்-53) இஃது இயற்கைப் புணர்ச்சிப்பின்றை சொற்ற தீராத் தேற்றவுரை. “இன்னிசை யுருமொடு” என்னும் அகப்பாட்டுள்
* இதற்கு நச். உரை பார்க்க. 1. பொருள்: எவ்வெப் பொருளை எவ்வெக் காலத்தில் விரும்பிப் பெற்றோமோ அவ்வக் காலத்தில் அவ்வப் பொருளாற் பெறும் இன்பம்போல இன்பம் தருவது தோடமைந்த கன்னம் உடையாளின் தோள். இயற்கைப் புணர்ச்சியிற் பெற்ற இன்பம் ஓரளவே நிறைவு தருவது. இடந்தலைப் பாட்டில் பெற்ற இன்பமே மனநிறைவை யுண்டாக்குவது. ஆதலின் இக்குறள் இயற்கைப் புணர்ச்சித் துறையன்று. 2. பொருள்: ஒள்ளிய தொடியுடைய இத்தலைவியிடமே காட்சி, கேட்டல், உண்ணல், உயிர்த்தல், தோய்தல் என்னும் ஐவகையான ஐம்பொறி யுணர்வுகளும் உள்ளன. 3. பொருள்: மகிழ்ந! வெறியாடுகளத்தில் தூவப்பட்ட நெற்பொரி போல வெண்மணல் தோற்றமளிக்கும் நீர்த்துறை முன்றிலில் தலைவியின் கைப்பற்றி இனிப் பிரியேன் என்று சூரரமகளிரை முன்னிட்டுச் செய்த நின் சூளுறவு எம்மை வருத்தின-தோழி தலைவனிடம் கூறியது. |