பக்கம் எண் :

களவியல் சூ. 11 85

குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு
நலத்தில் திரியா நாட்டமும் உடையோய்
கண்டதனளவையிற் கலங்குதி யெனின் இம்
மண்திணி கிடக்கை மாநிலம்
உண்டெனக் கருதி உணரலன்யானே.” 1

இது நிற்பவை நினைஇக் கழறியது.

“இடிக்குங் கேளிர் நுங் குறையாக
நிறுக் கலாற்றினோம் நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்றிந்நோய் நோன்று கொளற் கரிதே” 2      (குறுந்-58)

இது நிகழ்பவை உரைத்தது.

குற்றங்காட்டிய வாயிலாவது-தலைவன் மாட்டுச் சோர்வானும் காதல் மிகுதியானும் நேர்வுற்ற பழிபாவங்களை எடுத்துக் காட்டும் பாங்கன்.

பெட்பினும்-அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப் பால் வழியது என எண்ணி இவ்வாறு தலைமகன் மறுத்தவழி அதற்குடன்படல். அவ்வழி, நின்னாற் காணப்பட்டாள் எவ் விடத்தாள்? எத்தன்மையாள்? எனப் பாங்கன் வினாவுதலும்


1. பொருள்: பாங்கன் கூற்று. தலைவ! சூரியன் தன் வெம்மை மழுங்கினாலும் திங்கள் தீராத வெம்மையால் திசைகளை நடுங்கச் செய்தாலும் குணத்தில் திரியாக் குலத்தின் கொள்கையையும் அதனால் பெறும் நலத்தில் திரியாத நாட்டமும் உடையோய் நீ. அவளைக் கண்ட அளவில் மனங் கலங்குகிறாய் எனின் யான் இம்மண் திணிஞாலம் உண்டு என்று கருதி யுண்மை யுணராதவனாவேன். இதன் கருத்து இவ்வுலகம் இருத்தலின் அதற்கேற்ப நீ இனி இல்லறத்துக்கு முயல வேண்டும் என்பதாம்.

2. பொருள்: என்னை இடித்துரைக்கும் பாங்கனே! என்னை அவளொடு சேர்த்து வைப்பதாகிய செய்து நிறைவேற்றும் குறையை நின்னுடையதாகக் கொள்வது நல்லது. யான் அவள் பால் கொண்ட காமநோயானது ஞாயிறு காயும் பகற்பொழுதில் பாறையில் உள்ள வெண்ணெய் உருகிப் பரப்பதுபோல உடலெங்கும் பரவுகிறது. தாங்கிக் கொள அரிதாம்.