அதற்குத் தலைமகன் இடமும் உருவுங் கூறுதலும் அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும், மீண்டு தலைமகற்கு அவள் நிலைமை கூறலுமெல்லாம் உளவாம். அவ்வழிப் பாங்கன் வினாதலும் தலை மகன் உரைத்தனவும் உளவாம். பாங்கன் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. அவ்வழித் தலைமகன் உரைத்தற்குச் செய்யுள்:- “எலுவ சிறாஅர் ஏமமுறு நண்ப புலவர் தோழ கேளாய் அத்தை மாக்கடல் நடுவண் எண்நாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்குந் திருநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே1 (குறுந்-129) “கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று அதவத் தீங்கனி அன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து குறக் குறுமாக்கள் தாளங் கொட்டுமக் குன்றகத்ததுவே கொழுமிளைச் சீறூர் சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத்ததுவே பிறர் விடுத்தற் காகாது பிணித்த என் நெஞ்சே2 (நற்றிணை-95) இன்னும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைந்தெய்தல் வேண்டிக் கூறினவுங் கொள்க.
1. பொருள்: நண்பனே! கருங்கடல் நடுவண் எட்டாம் நாள் பிறை தோன்றியது போலக் கூந்தலின் பக்கத்துத் தோன்றும் (அவளது) நுதல், புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைக் கட்டுமாறு என்னைக் கட்டியது. 2. கருத்து: கழைக் கூத்தாடு மகள் ஆடிய கயிற்றில் மந்தியானது தன் குட்டி தன்னைப் பற்றித் தொங்க அக்கயிற்றில் ஏறி ஆடக் குறவர் மக்கள் தாளம் கொட்ட அமைந்த குன்றத்தில் உள்ளது சிற்றூர். அச் சிற்றூரில் உள்ளாள் கொடிச்சி. அக் கொடிச்சியின் கையிடத்ததாயிற்றுப் பிறரால் விடுவிக்க முடியாத அவளால் பிணிக்கப்பட்ட என் நெஞ்சம். |