பக்கம் எண் :

90தொல்காப்பியம்-உரைவளம்

வேய்பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச்
சொல்லவுஞ் சொல்லீர் ஆயிற் கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக்
கொய் புனங் காவலும் நுமதோ
கோடேந் தல்குல் நீள் தோளீரே” 1      (நற்றிணை-213)

பெயர் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. கெடுதி வினாயதற்குச் செய்யுள்:

“நறை பரந்த சாந்தம் அறஎறிந்து நாளால்
உறை யெதிர்ந்து வித்திய ஊழ் ஏனல்-பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
வேமரை போந்தன ஈண்டு”2      (திணை மாலை-1)

“இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரில்
தீதும் உண்டோ மாதரீரே”

என்றது பிறவாறு வினாயது. பிறவுமன்ன.

தோழி குறை.............இடனுமாருண்டே என்பது-தோழி குறையைத் தலைமகளைச் சார்த்தி மெய்யுறக் கூறுதலும், அமைதியா திரப்பினும், மற்றைய வழியும், சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும், அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடும் கூறுதலின் நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி மடல்மா கூறுதலும் உண்டு தலைமகன்கண் என்றவாறு.

‘தலைமகன்கண்’ என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.3 உம்மையாற் பிற கூறுதலு முண்டென்றவாறு. புணர்ச்சி


1. பொருள்: அல்குலும் தோளும் உடையவர்களே! நும் சிறுகுடியாது என யான் வினவவும் நீவிர் சொல்ல வில்லை. அது கிடக்க. இத்தினைப் புனம் காவலும் நும்முடையதேயோ இதனையேனும் கூறுங்கள்.

2. பொருள்: நறை எனும் கொடி படர்ந்த சந்தன மரத்தை வெட்டி நிலமாக்கி பருவக் காலத்தில் மழையையேற்று விதைத்த தினை முற்றிய இப்புனத்தின் கண் காவல் செய்யும் தாமரை முகத்தீர்! இப்பக்கம் அம்பு பாயப்பட்ட மான் ஒன்று போந்ததோ-நீவிர் கண்டீரோ?

3. சூத்திரத்தில் ‘தலைமகன்கண்’ என்பதில்லையாதலின் பொருள் செல்லும் ஆற்றலாற் கொள்ளப்பட்டது.